32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot

மானிய யூரியாவை முறைகேடாக பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை: நாமக்கல் கலெக்டர் எச்சரிக்கை.

Editor Published: August 17, 2026 2 நிமிட வாசிப்பு Breaking News
எழுத்து அளவு:

நாமக்கல் மாவட்டத்தில் மானிய விலையில் வழங்கப்படும் யூரியா உரத்தை பதுக்கி வைப்பது, அதிக விலைக்கு விற்பனை செய்வது அல்லது விவசாயம் அல்லாத பயன்பாட்டிற்கு பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என நாமக்கல் மாவட்ட கலெக்டர் மதுபாலன் எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் நடப்பு காரீப் பருவத்துக்கு தேவையான உரங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் உரக்கடைகளில் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

தற்போது 2,626 மெட்ரிக் டன் யூரியா, 1,127 மெட்ரிக் டன் டிஏபி, 978 மெட்ரிக் டன் பொட்டாஷ், 3,849 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ் மற்றும் 365 மெட்ரிக் டன் சூப்பர் பாஸ்பேட் உரங்கள் இருப்பில் உள்ளன.

உர விநியோகத்தை கண்காணிக்கும் வகையில், கண்காணிப்பு குழுவினர் உரக்கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

ஆதார் அடிப்படையில் விற்பனை செய்ய வேண்டும்

சில்லறை உர விற்பனையாளர்கள் தங்கள் பகுதிக்கு தேவையான உரங்களை கொள்முதல் செய்து, விவசாயிகளின் தேவைக்கு ஏற்ப முறையாக விற்பனை செய்ய வேண்டும்.

விவசாயிகளின் ஆதார் எண்ணை பதிவு செய்து, முழுமையான முகவரியுடன் விற்பனை விவரங்களை பராமரிக்க வேண்டும். மேலும், உரம் வாங்கும் விவசாயிகளுக்கு கட்டாயம் விற்பனை ரசீது வழங்க வேண்டும்.

யூரியா பதுக்கினால் உரிமம் ரத்து

யூரியாவை தேவைக்கு அதிகமாக வாங்கி பதுக்கி வைப்பது, அதிக விலைக்கு விற்பனை செய்வது அல்லது விவசாயம் அல்லாத பயன்பாட்டிற்கு அனுப்புவது சட்டவிரோதமாகும்.

இதுபோன்ற முறைகேடுகள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட சில்லறை உர விற்பனை நிலையத்தின் உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படுவதுடன், நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

விவசாயிகளின் தேவைக்கு ஏற்ப அனைத்து வகையான உரங்களையும் விற்பனையாளர்கள் வழங்க வேண்டும்.

மேலும், உரம் வாங்கும் விவசாயிகளை நுண்ணூட்டச் சத்துகள், உயிர் ஊக்கிகள் உள்ளிட்ட இணைப் பொருட்களையும் கட்டாயமாக வாங்க வற்புறுத்தக்கூடாது. அவ்வாறு வற்புறுத்துவது கண்டறியப்பட்டால் உரக் கட்டுப்பாட்டு சட்டம், 1985-ன் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் மதுபாலன் தெரிவித்துள்ளார்.

About The Author