32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot

தமிழக சுகாதாரத் துறையில் ரூ.2,997 கோடியில் 115 புதிய திட்டங்கள்: அமைச்சர் அருண்ராஜ் அறிவிப்பு.

Editor Published: August 17, 2026 3 நிமிட வாசிப்பு Breaking News
எழுத்து அளவு:

தமிழக சட்டப்பேரவையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மானியக் கோரிக்கையின்போது, 2026–27ம் ஆண்டுக்கான 115 புதிய அறிவிப்புகளை அமைச்சர் அருண்ராஜ் வெளியிட்டார். மொத்தம் சுமார் ரூ.2,997 கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட உள்ள இந்தத் திட்டங்களில் முதியோர் நலம், தாய்-சேய் நலம், குழந்தைகள் நலம், மருத்துவ மனிதவளம் மற்றும் நவீன மருத்துவக் கட்டமைப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

70 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவச சிகிச்சை

தமிழ்நாட்டில் முதல்முறையாக 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முதியோர்களுக்கு வருமான உச்சவரம்பு இல்லாமல் இலவச மருத்துவ சிகிச்சை வழங்கும் முதலமைச்சரின் முதியோர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் சுமார் 38 லட்சம் முதியோர் பயன்பெறுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘நலம்-AI’ வாட்ஸ்அப் வசதி

அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கான முன்பதிவு உள்ளிட்ட மருத்துவ சேவைகளை எளிதாக பெறும் வகையில் ‘நலம்-AI’ வாட்ஸ்அப் சாட்பாட் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் 24 மணி நேரமும் மருத்துவம் தொடர்பான நம்பகமான தகவல்களை பெறும் வசதி ஏற்படுத்தப்படும்.

30 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவச மருத்துவப் பரிசோதனை

ரூ.51 கோடி மதிப்பில், 30 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆண்டுக்கு ஒருமுறை 14 வகையான அடிப்படை உடல்நலப் பரிசோதனைகள் இலவசமாக மேற்கொள்ளப்பட உள்ளன.

மாவட்டங்களில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி சிகிச்சை

பெருநகரங்களில் மட்டுமே கிடைக்கும் உயர் சிறப்பு மருத்துவ சிகிச்சைகளை மாவட்ட அளவிலும் விரிவுபடுத்தும் வகையில் 284 உயர் சிறப்பு மருத்துவப் பணியிடங்கள் புதிதாக உருவாக்கப்பட உள்ளன.

மேலும், உலகத்தரம் வாய்ந்த மருத்துவ சேவைகளை வழங்கும் நோக்கில் ‘மாநில முக்கியத்துவம் வாய்ந்த மருத்துவ நிறுவனங்கள் சட்டம்’ கொண்டு வரப்பட உள்ளது. இதற்காக முதற்கட்டமாக ரூ.16.06 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

10,500-க்கும் மேற்பட்ட புதிய பணியிடங்கள்

மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் 10,500-க்கும் மேற்பட்ட புதிய மருத்துவப் பணியிடங்கள் உருவாக்கப்பட உள்ளன. மேலும், நீண்டகால கோரிக்கையை ஏற்று 2,500 ஒப்பந்த செவிலியர்கள் காலமுறை ஊதியத்தின் கீழ் கொண்டுவரப்பட உள்ளனர்.

குழந்தைகளுக்கு இலவச இன்சுலின்

18 வயதுக்குட்பட்ட டைப்-1 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அரசு மருத்துவமனைகளில் ஆண்டு முழுவதும் இலவச இன்சுலின் வழங்கும் திட்டத்திற்காக ரூ.9.94 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

பள்ளி மாணவர்களிடையே ரத்தசோகையைத் தடுக்கும் வகையில் 6, 9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு சிகிச்சை வழங்கும் ‘இரும்பு கண்மணி’ திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளது.

பச்சிளம் குழந்தைகளுக்கு அதிநவீன சிகிச்சை

மிகக் குறைந்த எடையுடன் பிறக்கும் பச்சிளம் குழந்தைகளுக்காக 6 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ‘நியோ-ஜெனிசிஸ்’ பிரிவுகள் அமைக்கப்பட உள்ளன.

தமிழ்நாடு மெடிசிட்டி

மருத்துவ சிகிச்சை, ஆராய்ச்சி, மருத்துவ சுற்றுலா மற்றும் ஆயுஷ் மருத்துவத்தை ஒருங்கிணைத்து உலகத்தரம் வாய்ந்த தமிழ்நாடு மருத்துவ நகரம் (TN Medicity) அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை ரூ.10 கோடி செலவில் தயாரிக்கப்பட உள்ளது.

மேலும், 20 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களுக்கான புதிய விடுதிகள் ரூ.379.95 கோடி மதிப்பிலும், 31 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ரூ.233 கோடி மதிப்பில் உயர்தர மருத்துவ உபகரணங்களும் அமைக்கப்பட உள்ளன. 10 மருத்துவமனைகளில் புதிய கேத் லேப் வசதிகளும் ஏற்படுத்தப்பட உள்ளன.

பெண்களுக்கு தனி சுகாதாரக் கொள்கை

மாதவிடாய் நிறைவுப் பருவத்தில் பெண்களுக்கு ஏற்படும் உடல் மற்றும் மனநலப் பிரச்சினைகளை கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் வகையில் புதிய கொள்கை வகுக்கப்பட உள்ளது.

மேலும், தற்போதைய சுகாதாரத் தேவைகளுக்கு ஏற்ப 1939-ம் ஆண்டின் தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டத்துக்கு மாற்றாக புதிய சட்டம் கொண்டு வரப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தத்தில், 2026–27ம் ஆண்டுக்கான மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள 115 புதிய திட்டங்கள் மூலம் முதியோர், குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கான மருத்துவ சேவைகளை மேம்படுத்துவதுடன், தமிழகத்தின் மருத்துவ உள்கட்டமைப்பை நவீனப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

About The Author