செய்தியைக் கேட்க / Listen to News
திருச்செங்கோடு புதிய பஸ் ஸ்டாண்டில் உள்ள சில கடைகளில் காலாவதியான குளிர்பானங்கள் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர். இதனால், உணவு பாதுகாப்புத்துறை உடனடி ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
திருச்செங்கோடு புதிய பஸ் ஸ்டாண்டிற்கு சேலம், ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்தும், சுற்றுவட்டார கிராமங்களிலிருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்களின் தேவைக்காக பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் பல்வேறு கடைகள் செயல்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், சில கடைகளில் காலாவதியான கூல்டிரிங்க்ஸ் மற்றும் குடிநீர் பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர். பஸ்ஸைப் பிடிக்கும் அவசரத்தில் பொருட்களின் தயாரிப்பு தேதி மற்றும் காலாவதி தேதியை பலரும் சரிபார்க்காமல் வாங்கிச் செல்வதை பயன்படுத்தி, சில வியாபாரிகள் காலாவதியான குளிர்பானங்களை விற்பனை செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும், அதிகபட்ச சில்லறை விலை (MRP) ரூ.35 என அச்சிடப்பட்டுள்ள குளிர்பானங்களை ரூ.50 வரை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாகவும் பயணிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பயணிகள் கூறுகையில், “பஸ் ஸ்டாண்டில் விற்கப்படும் உணவுப் பொருட்கள் மற்றும் குளிர்பானங்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும். காலாவதியான பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், எம்.ஆர்.பி.யை விட கூடுதல் விலைக்கு பொருட்களை விற்பனை செய்வதையும் தடுக்க வேண்டும்,” என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்களின் உடல்நலனை பாதுகாக்கும் வகையில், திருச்செங்கோடு புதிய பஸ் ஸ்டாண்டில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொள்வார்களா என்ற எதிர்பார்ப்பு பயணிகள் மத்தியில் எழுந்துள்ளது.