32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot

விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் அதிகாரிகளுடன் விவசாயிகள் வாக்குவாதம்- திருச்செங்கோட்டில் பரபரப்பு.

Editor Published: July 25, 2026 2 நிமிட வாசிப்பு Breaking News
எழுத்து அளவு:

திருச்செங்கோடு: நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு கோட்டத்திற்கு உட்பட்ட பரமத்தி வேலூர், திருச்செங்கோடு மற்றும் குமாரபாளையம் வட்டார விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டம், திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு ஆர்டிஓ லெனின் தலைமை தாங்கினார். இதில் வேளாண்மை, தோட்டக்கலை, வருவாய்த் துறை, நகராட்சி நிர்வாகம், ஊராட்சி ஒன்றியம், பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத் துறை, கனிமவளத் துறை, வட்டாரப் போக்குவரத்துத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பேசிய விவசாயிகள், அதிகாரிகள் தங்களது கோரிக்கைகளை காது கொடுத்து கேட்பதில்லை என்றும், பல்வேறு பணிகளுக்காக தேவையில்லாமல் அலைக்கழிப்பதாகவும் குற்றம்சாட்டினர். மேலும், பிரச்சினைக்குரிய இடங்களை நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்காமல் தொடர்ந்து தள்ளிப்போடுவதாகவும், கடந்த குறைதீர் கூட்டத்தில் எழுப்பப்பட்ட கோரிக்கைகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து எந்த விளக்கமும் வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்தனர்.

இதனால் விவசாயிகளுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, விவசாயிகள் முன்வைக்கும் கோரிக்கைகளை முறையாக பதிவு செய்து, அடுத்த குறைதீர் கூட்டத்தில் அவற்றுக்கான நடவடிக்கை குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று ஆர்டிஓ லெனின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இதற்கிடையில், விவசாயிகள் தங்களது பிரச்சினைகளை விளக்கிக் கொண்டிருந்தபோது சில அதிகாரிகள் செல்போன்களை பயன்படுத்திக் கொண்டிருந்ததாக கூறி விவசாயிகள் அதிருப்தி தெரிவித்தனர். “எங்கள் கோரிக்கைகளை அதிகாரிகள் கவனமாகக் கேட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். விளக்கம் கேட்டாலும் பதில் அளிப்பதில்லை. அதிகாரிகள் மெத்தனமாக செயல்படுகின்றனர். உங்கள் கட்டுப்பாட்டில் உள்ள அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று விவசாயிகள் ஆர்டிஓ லெனினிடம் வலியுறுத்தினர்.

இதனால் குறைதீர் கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

About The Author