32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற உறுதி: 5-வது நாளில் பூபதியின் உண்ணாவிரதம் வாபஸ்.

Editor Published: August 12, 2026 2 நிமிட வாசிப்பு திருச்செங்கோடு
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க / Listen to News


விளம்பரம்
VMTalks In-article Ad Slot

நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, அவற்றை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சமூக ஆர்வலரும் விவசாயியுமான பூபதி மேற்கொண்ட தனிநபர் உண்ணாவிரதப் போராட்டம், அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து 5-வது நாளில் முடிவுக்கு வந்தது.

நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் ஒன்றியம், வேலகவுண்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பூபதி, பள்ளபாளையம் ஏரி, பெரியமணலி மற்றும் சேர்வம்பட்டி பெரியகுட்டை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 30 ஏக்கர் நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டி, அவற்றை மீட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி தனது வீட்டில் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார்.

மேலும், பள்ளபாளையம் ஏரியில் சுமார் 24 ஏக்கர் நிலம் தனிநபர்கள் பெயரில் பட்டா செய்யப்பட்டுள்ளதாகவும், அப்பகுதியில் மரங்களை வெட்டி, போர்வெல் அமைத்து, சோலார் வசதி ஏற்படுத்தி விவசாயம் செய்ய முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் பூபதி புகார் தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக வருவாய்த்துறை அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர் குற்றம்சாட்டியிருந்தார்.

இந்நிலையில், பூபதியின் போராட்டத்திற்கு சமூக ஆர்வலர்கள், அரசியல் பிரமுகர்கள், விவசாய அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் ஆதரவு தெரிவித்தனர்.

இதையடுத்து ஆர்.ஐ. (பொ) வீரராஜ், விஏஓ (பொ) செந்தில்ராஜா உள்ளிட்ட அதிகாரிகள் பூபதியை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். நீர்நிலைகள் தொடர்பாக அளிக்கப்பட்டுள்ள புகார்களை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து, 5-வது நாளாக நடைபெற்ற தனிநபர் உண்ணாவிரதப் போராட்டத்தை பூபதி வாபஸ் பெற்றார்.

About The Author

உடனடி செய்திகள்