
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் கணவனின் குடிப்பழக்கத்தால் ஏற்பட்ட குடும்பத் தகராறில், கணவன் மற்றும் மனைவி அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலைக்கு முன்பு இருவரும் தனித்தனியாக செல்போனில் வீடியோ பதிவு செய்து வைத்திருந்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
திருச்செங்கோடு ஏ.கே.இ. ரோடு, சக்தி மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் நித்யானந்தம் (41). ஆட்டோ கன்சல்டிங் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி தேன் தமிழ்ச்செல்வி (37), தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு திருமணமாகி 18 ஆண்டுகள் ஆன நிலையில், பவிஷ்னா (17) என்ற மகளும், குகன் கிருஷ்ணா (14) என்ற மகனும் உள்ளனர். இருவரும் வெளியூரில் உள்ள விடுதியில் தங்கி படித்து வந்ததாக கூறப்படுகிறது.
குடிப்பழக்கத்தால் அடிக்கடி தகராறு
நித்யானந்தத்திற்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.
இந்நிலையில், நேற்று காலை முதல் இருவருக்கும் இடையே சிறுசிறு வாக்குவாதங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த நித்யானந்தம் வீட்டின் படுக்கையறைக்குச் சென்று செல்போனில் வீடியோ பதிவு செய்து, அதனை தனது மனைவிக்கு அனுப்பிவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
அந்த வீடியோவை பார்த்த தேன் தமிழ்ச்செல்வி, தனது தரப்பு நியாயத்தை செல்போனில் வீடியோவாக பதிவு செய்துவிட்டு, அருகிலுள்ள மற்றொரு அறைக்குச் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி
வீட்டில் நீண்ட நேரமாக எவ்வித சத்தமும் இல்லாததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளனர். அப்போது கணவன், மனைவி இருவரும் தூக்கில் சடலமாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், உடனடியாக திருச்செங்கோடு டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் இருவரது உடல்களையும் மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இருவரும் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு தனித்தனியாக செல்போனில் வீடியோ பதிவு செய்திருந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்த வீடியோக்கள் தொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து திருச்செங்கோடு நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து, குடும்பத் தகராறுக்கான காரணம் உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இரண்டு பிள்ளைகளையும் தவிக்கவிட்டு கணவன், மனைவி அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் திருச்செங்கோடு பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.