செய்தியைக் கேட்க / Listen to News
நாமக்கல் மாவட்டம், நல்லூர் காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வரும் கங்காதரன், ரூ.30 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கையும் களவுமாக பிடிபட்டதாக கூறப்படுகிறது.
நல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நடந்தை சாலப்பாளையத்தைச் சேர்ந்த விவசாயி சௌமியராஜ் என்பவருக்கும், அவரது பக்கத்து நிலத்துக்காரரான முத்துசாமிக்கும் இடையே நில ஆக்கிரமிப்பு தொடர்பாக ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 4 மாதங்களுக்கு முன்பு நல்லூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த வழக்கு தொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பு சௌமியராஜை காவல் உதவி ஆய்வாளர் கங்காதரன் அழைத்ததாகவும், வழக்கை தனக்கு சாதகமாக முடிப்பதற்காக ரூ.30 ஆயிரம் லஞ்சம் கேட்டதாகவும் புகார் எழுந்துள்ளது.
லஞ்சம் கொடுக்க விரும்பாத சௌமியராஜ், இதுகுறித்து நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் வழிகாட்டுதலின்படி, இன்று மாலை சௌமியராஜ் ரூ.30 ஆயிரம் பணத்தை நல்லூர் காவல் உதவி ஆய்வாளர் கங்காதரனிடம் வழங்கியதாக கூறப்படுகிறது. பணத்தை அவர் பெற்றுக்கொண்டதாக கூறப்படும் நிலையில், அப்பகுதியில் மறைந்திருந்த நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை காவல் ஆய்வாளர் பிரபு தலைமையிலான போலீசார் கங்காதரனை கையும் களவுமாக பிடித்தனர்.
தொடர்ந்து அவரிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவம் தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.