
நாமக்கல் கோட்டை ரோடு சந்திப்பில் போக்குவரத்து காவல்துறையினர் சார்பில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் ஹெல்மெட் அணிந்து வந்த இருசக்கர வாகன ஓட்டிகளை போலீசார் பாராட்டி, அவர்களுக்கு பரிசுப் பொருட்களை வழங்கி வரவேற்றனர்.
நாமக்கல் நகரில் இருசக்கர வாகனங்களில் செல்லும் பொதுமக்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தி, கோட்டை ரோடு சந்திப்பில் போக்குவரத்து காவல்துறையினர் சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர்.
அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் சென்ற வாகன ஓட்டிகளை போலீசார் கண்காணித்தனர். ஹெல்மெட் அணியாமல் சென்றவர்களுக்கு, சாலை விபத்துகளில் ஹெல்மெட் உயிரைக் காக்கும் முக்கிய பாதுகாப்பு உபகரணம் என்பதை எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
ஹெல்மெட் அணிந்தவர்களுக்கு கிப்ட்
இதில் வித்தியாசமான முயற்சியாக, விதிமுறைகளை பின்பற்றி ஹெல்மெட் அணிந்து வந்த இருசக்கர வாகன ஓட்டிகளை போக்குவரத்து போலீசார் பாராட்டினர். அவர்களுக்கு கிப்ட் வழங்கி, தொடர்ந்து இதேபோல் பாதுகாப்பு விதிகளை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தினர்.
மேலும், இருசக்கர வாகனத்தில் பயணம் செய்யும் போது ஓட்டுநர் மட்டுமின்றி பின்னால் அமர்ந்து செல்பவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்றும், அதிவேகம் மற்றும் கவனக்குறைவான வாகன ஓட்டத்தை தவிர்க்க வேண்டும் என்றும் போலீசார் அறிவுறுத்தினர்.
“அபராதம் விதிப்பதைவிட, விதிகளை கடைபிடிப்பவர்களை பாராட்டி ஊக்கப்படுத்துவது பொதுமக்களிடம் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்” என்ற நோக்கத்தில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் போலீசாரின் இந்த முயற்சியை வரவேற்றனர். ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு பரிசு வழங்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் கவனத்தை ஈர்த்தது.