
நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி ஒன்றியப் பகுதிகளில் வசிக்கும் ரெட்டி (கஞ்சம்) சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு, பெற்றோரிடம் உரிய ஆவணங்கள் இருந்தும் குழந்தைகளுக்கு சாதிச் சான்றிதழ் வழங்குவதில் ஏற்படும் சிரமங்களை போக்க நடவடிக்கை எடுக்கக் கோரி, 100-க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில், ரெட்டி (கஞ்சம்) சமூகத்தினர் தமிழ்நாடு முழுவதும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளனர் என்றும், இதுதொடர்பாக 1981-ம் ஆண்டு சமூக நலத்துறை அரசாணை எண் 541 உள்ளிட்ட பல்வேறு அரசாணைகளில் உரிய வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
எனினும், சேந்தமங்கலம் வட்டம், எருமப்பட்டி ஒன்றியப் பகுதிகளில் வசிக்கும் ரெட்டி (கஞ்சம்) சமூகத்தைச் சேர்ந்த பெற்றோரிடம் சாதிச் சான்றிதழ், பள்ளி மாற்றுச் சான்றிதழ் உள்ளிட்ட உரிய ஆவணங்கள் இருந்தபோதிலும், அவர்களது குழந்தைகளுக்கு சாதிச் சான்றிதழ் பெறுவதில் சிரமம் ஏற்படுவதாக மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
கல்வி, வேலைவாய்ப்பு பாதிக்கும் அபாயம்
சாதிச் சான்றிதழ் கிடைப்பதில் ஏற்படும் தாமதம் காரணமாக மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கை, கல்வி உதவித்தொகை மற்றும் வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு வாய்ப்புகள் பாதிக்கப்படும் நிலை உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
எனவே, அரசாணைகளில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளின்படி தகுதியுடைய ரெட்டி (கஞ்சம்) சமூகத்தினருக்கு உரிய காலத்திற்குள் சாதிச் சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பெற்றோரிடம் ஏற்கனவே உரிய ஆவணங்கள் மற்றும் சாதிச் சான்றிதழ் உள்ள நிலையில், அவர்களது குழந்தைகளுக்கும் சாதிச் சான்றிதழ் வழங்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தனர்.