32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot

செப்.26 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் – அரசு ஊழியர் சங்கம்.

Editor Published: September 4, 2026 2 நிமிட வாசிப்பு நாமக்கல்
எழுத்து அளவு:

அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் எந்தவித சாதகமான அறிவிப்பும் வெளியாகவில்லை என தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் நாமக்கல் மாவட்ட பிரதிநிதிகள் பேரவை கூட்டம் இன்று நாமக்கல்லில் நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதும் இருந்து சங்க நிர்வாகிகள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்று, அரசு ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்து விவாதித்தனர்.

இதைத்தொடர்ந்து, சங்கத்தின் மாநில துணைத்தலைவர் அம்சராஜ் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

தமிழக அரசு பழைய ஓய்வூதியத் திட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். பல்வேறு அரசுத் துறைகளில் தொகுப்பூதியம் உள்ளிட்ட வெவ்வேறு நிலைகளில் பணியாற்றி வருபவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். மேலும், அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பி, வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.

தமிழக அரசு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்து சட்டமன்ற கூட்டத்தொடரை நடத்தி வரும் நிலையில், அரசு ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகள் ஏற்கனவே அரசிடம் வழங்கப்பட்டிருந்ததாகவும், அந்தக் கோரிக்கைகள் தொடர்பாக இந்த கூட்டத்தொடரிலேயே சாதகமான அறிவிப்புகள் அல்லது அரசாணைகள் வெளியாகும் என எதிர்பார்த்திருந்ததாகவும் தெரிவித்தார்.

ஆனால், இதுவரை அரசு ஊழியர்களுக்கு சாதகமாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனை அரசு ஊழியர் சங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் அம்சராஜ் கூறினார்.

மேலும், தமிழக வெற்றி கழகத்தின் நிறுவனத் தலைவர் முதலமைச்சரான பின்னர், சங்கத்தின் நிர்வாகிகள் அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்ததாகவும், அதன்பிறகு அரசு ஊழியர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளின் நிர்வாகிகளை முதலமைச்சர் சந்தித்து கோரிக்கைகளை கேட்பதோடு, அவற்றுக்கு தீர்வு காண வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

கோரிக்கைகள் மீது அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், வரும் செப்டம்பர் 26-ஆம் தேதி திண்டுக்கல்லில் மாநில அளவிலான கூட்டம் நடைபெறும். அந்தக் கூட்டத்தில் தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்களை திரட்டி காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என அம்சராஜ் தெரிவித்தார்.

About The Author