அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கருத்தில் கொண்டு, நாமக்கல் மாவட்டத்தில் பொருட்கள் கள்ளச்சந்தையில் பதுக்கப்படுகிறதா? அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறதா? என்பதை கண்காணிக்க மாவட்ட வழங்கல் அலுவலர் தலைமையில் விலை கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவில் குற்றப்புலனாய்வுத்துறை அலுவலர்கள், நாமக்கல் குடிமைப்பொருள் தனி வட்டாட்சியர், அனைத்து வட்ட வழங்கல் அலுவலர்கள், சிறப்பு வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் பறக்கும் படை துணை வட்டாட்சியர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
குழுவினர் நாள்தோறும் சில்லறை மற்றும் மொத்த விற்பனை கடைகளுக்கு நேரில் சென்று அத்தியாவசிய பொருட்களின் விலை மற்றும் இருப்பு விவரங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த ஆய்வின்போது அத்தியாவசிய பொருட்கள் கள்ளச்சந்தையில் பதுக்கி வைக்கப்படுவது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது அத்தியாவசிய பொருட்கள் சட்டம் 1955 மற்றும் கள்ளச்சந்தை தடுப்பு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் பராமரிப்பு சட்டம் 1980 ஆகியவற்றின் கீழ் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும், அத்தியாவசிய பொருட்களை பதுக்கி வைத்திருப்பது, அதிக விலைக்கு விற்பனை செய்வது உள்ளிட்ட குறைபாடுகள் குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்.
இதற்காக 94450 45612 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் லி. மதுபாலன் தெரிவித்துள்ளார்.