32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot

கல் குவாரிகளின் எல்லை அளவீடுகளை மீண்டும் முறையாக மேற்கொள்ள வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை.

Editor Published: August 25, 2026 2 நிமிட வாசிப்பு நாமக்கல்
எழுத்து அளவு:

எலச்சிபாளையம் அருகே செயல்பட்டு வரும் கல் குவாரிகள் மற்றும் கிரஸர்களின் எல்லை அளவீடுகளை அதிகாரிகள் முறையாக மேற்கொள்ளவில்லை எனக்கூறி, விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

திருச்செங்கோடு வட்டம், எலச்சிபாளையம் ஒன்றியம், கோக்கலை கிராமம் இளையாம்பாளையம் பகுதியில் 5-க்கும் மேற்பட்ட கல் குவாரிகள் மற்றும் கிரஸர்கள் செயல்பட்டு வருகின்றன. இதனால் விவசாயம் பாதிக்கப்படுவதுடன், நிலத்தடி நீர்மட்டமும் தொடர்ந்து குறைந்து வருவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

கல் குவாரிகள் மற்றும் கிரஸர்களை தடை செய்யக்கோரி கடந்த 2020-ம் ஆண்டு குடியரசு தினத்தன்று நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும், தொடர்ந்து பொதுமக்கள் வலியுறுத்தி வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், அரசு விதிகளின்படி கல் குவாரிகளுக்கும் குடியிருப்புகளுக்கும் இடையே இருக்க வேண்டிய இடைவெளி உள்ளிட்ட அளவீடுகள் முறையாக மேற்கொள்ளப்படவில்லை என விவசாயிகள் குற்றம்சாட்டினர். எனவே, சம்பந்தப்பட்ட பகுதிகளில் அதிகாரிகள் மீண்டும் நேரில் ஆய்வு செய்து, குவாரிகளின் எல்லை மற்றும் குடியிருப்புகளுக்கான இடைவெளியை முறையாக அளவீடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

கல் குவாரி எதிர்ப்பு இயக்கத் தலைவர் மற்றும் விவசாயி கே.பழனிவேல் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

இதில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சு.சுரேஷ், நாம் தமிழர் கட்சியின் மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் இ.கார்த்தி, பத்து ரூபாய் இயக்கத் தலைவர் பி.பன்னீர்செல்வம் மற்றும் விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

About The Author