செய்தியைக் கேட்க / Listen to News
திருச்செங்கோடு 31-வது வார்டு கவுன்சிலர் முருகேசனுக்கும், தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த தினேஷுக்கும் இடையே கடந்த மே மாதம் குடிநீர் குழாய் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் பதிவு செய்யப்பட்டிருந்த வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கு ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்து, பல்வேறு அமைப்புகள் திருச்செங்கோட்டில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.
கடந்த மே மாதம் குடிநீர் குழாய் தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது, தினேஷ் சாதிப் பெயரை கூறி அவதூறாக பேசியதாக கவுன்சிலர் முருகேசன் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. அந்தப் புகாரின் அடிப்படையில், அப்போதைய டிஎஸ்பி கிருஷ்ணன், தினேஷ் மீது பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்திருந்தார்.
இந்த வழக்கை தொடர்ந்து விசாரித்த தற்போதைய டிஎஸ்பி தங்கவேல், விசாரணையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவுகளைத் தொடர போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கருதி அந்த சட்டப் பிரிவுகளை நீக்கி நடவடிக்கை எடுத்ததாக கூறப்படுகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ் புலிகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள், திருச்செங்கோடு அண்ணா சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடத்தின.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் மீண்டும் வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இல்லையெனில் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் என்றும் தெரிவித்தனர்.