சென்னை / திருச்செங்கோடு: திருச்செங்கோடு மக்களின் நீண்டநாள் கோரிக்கையான காவிரி – திருமணிமுத்தாறு இணைப்புத் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக, அமைச்சர் அருண்ராஜ் செ
ன்னை தலைமைச் செயலகத்தில் நீர்வளத்துறை அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார்.
திருச்செங்கோடு தொகுதியில் வறண்டு கிடக்கும் ஏரிகளை காவிரி உபரி நீரால் நிரப்பும் வகையில், காவிரி – திருமணிமுத்தாறு இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பது இப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகளின் 70 ஆண்டு கால கோரிக்கையாக இருந்து வருகிறது. பல தேர்தல்களில் இந்தத் திட்டம் வாக்குறுதியாக அறிவிக்கப்பட்டாலும், இதுவரை நடைமுறைக்கு வரவில்லை.
சட்டசபைத் தேர்தலின்போது, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் போட்டியிட்ட அருண்ராஜ், இந்தத் திட்டத்தின் மூலம் தொகுதியில் உள்ள 70-க்கும் மேற்பட்ட ஏரிகளை தூர்வாரி புனரமைத்து, காவிரி நீரை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்திருந்தார்.
அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ள அமைச்சர் அருண்ராஜ், கடந்த வாரம் கூட்டப்பள்ளி, கருவேப்பம்பட்டி மற்றும் சீனிவாசம்பாளையம் ஏரிகளை நேரில் ஆய்வு செய்து, அதிகாரிகளுடன் கள ஆய்வு மேற்கொண்டிருந்தார்.
இதன் தொடர்ச்சியாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், ஏற்கனவே சேலம் மாவட்டத்தில் செயல்பாட்டில் உள்ள காவிரி – திருமணிமுத்தாறு இணைப்புத் திட்டத்தை நாமக்கல் மாவட்டத்திற்கும் விரிவுபடுத்துவது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
மேலும், சேலம் – நாமக்கல் மாவட்ட எல்லையில் உள்ள வைகுந்தம் ஏரியிலிருந்து, திருச்செங்கோடு தொகுதிக்குட்பட்ட மங்களம், கருமாபுரம், வட்டூர் கஸ்பா, வட்டூர், உஞ்சனை, மோளியப்பள்ளி மற்றும் கரிச்சிபாளையம் உள்ளிட்ட ஏரிகளுக்கு காவிரி உபரி நீரை கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் திட்ட மதிப்பீட்டை உடனடியாகத் தயாரித்து சமர்ப்பிக்குமாறு நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.
அத்துடன், இயற்கை நீர்வழித்தடங்கள் மூலம் தொகுதியில் உள்ள பிற ஏரிகளையும் இந்தத் திட்டத்துடன் இணைக்கும் வாய்ப்புகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளுமாறு அதிகாரிகளிடம் அமைச்சர் வலியுறுத்தினார்.
திருச்செங்கோடு பகுதியின் நீண்டநாள் நீர்ப்பாசன கோரிக்கையை நிறைவேற்றும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கைக்கு, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.