மல்லசமுத்திரம் பொன்னியாறு ஓடை பகுதியில் சட்டவிரோதமாக மதுபானங்களை விற்பனை செய்ததாக ஒருவரை திருச்செங்கோடு மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் கைது செய்தனர்.
மல்லசமுத்திரம் பொன்னியாறு ஓடை பகுதியில் கடந்த சில நாட்களாக ஒருவர் சட்டவிரோதமாக மதுபானங்களை விற்பனை செய்து வருவதாக பொதுமக்களிடம் இருந்து போலீசாருக்கு புகார் வந்தது.
இதையடுத்து, திருச்செங்கோடு மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மதுபானங்களை விற்பனை செய்து கொண்டிருந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். ஆரம்பத்தில் அவர் முன்னுக்குப் பின் முரணாக தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தியதில், டாஸ்மாக் மதுபானங்களை சட்டவிரோதமாக பதுக்கி வைத்து காலை 5 மணிமுதல் விற்பனை செய்து வந்ததுடன், ரூ.150 மதிப்புள்ள டாஸ்மாக் மதுபாட்டில்களை ரூ.220-க்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது.
மேலும் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் மல்லசமுத்திரம் அருகே செண்பகமாதேவி கிராமத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரது மகன் மணிகண்டன் (31) என்பதும், பொன்னியாறு பகுதியில் எலக்ட்ரானிக்ஸ் கடை நடத்தி வருவதும் தெரியவந்தது.
அவரிடமிருந்து 15 மதுபாட்டில்கள் மற்றும் ரூ.1,000 ரொக்கப் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து மணிகண்டனை திருச்செங்கோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.