நாமக்கல் மாவட்ட நிர்வாகம், பள்ளிக் கல்வித் துறை மற்றும் கே.கே.பி தொழில் நிறுவனங்கள் சார்பில், நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் லி. மதுபாலன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவிகளுக்கு விதைப் பந்துகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி நடத்தப்பட்ட பேச்சு, ஓவியம், கட்டுரை மற்றும் அடுப்பில்லா சமையல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.
இதையடுத்து, மாணவிகள் தயாரித்திருந்த அடுப்பில்லா சமையல் உணவுகள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டன. இதில் கம்பு, சோளம், ராகி உள்ளிட்ட சிறுதானியங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட உணவுகள், நீராகாரங்கள் மற்றும் பல்வேறு இயற்கை உணவுகள் இடம்பெற்றிருந்தன. 80-க்கும் மேற்பட்ட வகையான உணவுப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்த நிலையில், அவற்றை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாணவிகள் பார்வையிட்டனர்.
மேலும், இயற்கை உணவுகளின் அவசியம் மற்றும் சிறுதானியங்களின் முக்கியத்துவம் குறித்தும் மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
முன்னதாக, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் தாவரங்களின் முக்கியத்துவம் குறித்து அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி தாவரவியல் துறை இணை பேராசிரியர் இ.ஜி. வெஸ்லி உள்ளிட்டோர் மாணவிகளுக்கு விளக்கமளித்தனர்.
நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியர் லி. மதுபாலன், சுற்றுச்சூழலை பாதிக்கும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை பெருமளவில் குறைக்க வேண்டும் என்றார். காலநிலை மாற்றம் காரணமாக உலகின் பல்வேறு பகுதிகளில் இயற்கை பேரிடர்கள் ஏற்பட்டு வருவதாகவும், சுற்றுச்சூழல் பாதிப்பு மனிதர்களை மட்டுமின்றி பிற உயிரினங்களையும் பாதிப்பதாகவும் தெரிவித்தார்.
சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் மாணவிகள் மேற்கொள்ளும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை பாராட்டிய அவர், விதைப் பந்துகளை தயாரித்து காலி இடங்களில் தூவி மரம் மற்றும் செடிகள் வளர்ப்பது குறித்தும் மாணவிகளுக்கு அறிவுறுத்தினார்.
மேலும், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் செடிகளை நட்டு வளர்ப்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், அதனை மாணவிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இ. மாதவன், மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) கே.எஸ். புருஷோத்தமன், தொழில் நிறுவனத்தின் நிறுவனர் தலைவர் பெ. நல்லதம்பி, அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை க. சுமதி, தமிழ்நாடு பசுமை இயக்க மாவட்ட தொடர்பு அலுவலர் சி.ஆர். இராஜேஷ் கண்ணன், ஆசிரியைகள் மற்றும் மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.