
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அடுத்த பிலிக்கல்பாளையத்தில் வெல்ல வியாபாரியின் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல், தம்பதியினரை கத்தியால் தாக்கி கட்டிப்போட்டு, ரூ.40 லட்சம் ரொக்கம் மற்றும் 40 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிலிக்கல்பாளையத்தை சேர்ந்த வைரவன் வெல்ல வியாபாரம் செய்து வருகிறார். ஆலையங்களில் இருந்து வெல்லத்தை மொத்தமாக வாங்கி விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று நள்ளிரவு வைரவன் மற்றும் அவரது மனைவி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அதிகாலை சுமார் 2 மணியளவில் வீட்டின் கதவை உடைத்து 6 பேர் கொண்ட மர்ம கும்பல் உள்ளே புகுந்ததாக தெரிகிறது.
தொடர்ந்து, தம்பதியினரை மிரட்டிய கொள்ளையர்கள், கத்தியால் தாக்கியதில் இருவருக்கும் லேசான காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் அவர்களை கட்டிப்போட்ட மர்ம நபர்கள், செல்போன்களையும் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.
இதையடுத்து வீட்டில் வைத்திருந்த சுமார் ரூ.40 லட்சம் ரொக்கம் மற்றும் 40 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்துக் கொண்டு அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றதாக தெரிகிறது
சம்பவம் குறித்து அக்கம்பக்கத்தினர் ஜேடர்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் யாதவ் கிரீஸ் அசோக் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
மேலும், மோப்பநாய் வரவழைக்கப்பட்டு கொள்ளையர்கள் தப்பிச் சென்ற பாதை குறித்து போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். தடயவியல் நிபுணர்களும் சம்பவ இடத்தில் பதிவான தடயங்களை சேகரித்து வருகின்றனர்.
வெல்ல வியாபாரி வீட்டில் ரூ.40 லட்சம் மற்றும் 40 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பிலிக்கல்பாளையம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.