32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot

திருச்செங்கோடு நகராட்சியில் 4 வகையாக கழிவுகளை தரம் பிரித்து வழங்க விழிப்புணர்வு.

Editor Published: August 27, 2026 2 நிமிட வாசிப்பு திருச்செங்கோடு
எழுத்து அளவு:

திருச்செங்கோடு நகராட்சியில் வீடுகளில் சேகரிக்கப்படும் கழிவுகளை நான்கு வகைகளாக தரம் பிரித்து வழங்குவது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் முகாம் நடைபெற்றது.

திருச்செங்கோடு நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி, வீடுகளில் சேகரமாகும் கழிவுகளை ஈரக்கழிவு, மக்காத கழிவு, சுகாதாரக் கழிவு மற்றும் வீட்டு அபாயகரமான கழிவு என நான்கு வகைகளாக பிரித்து நகராட்சி பணியாளர்களிடம் வழங்க வேண்டும்.

இதன்படி, ஈரக்கழிவுகளை பச்சை நிற தொட்டியிலும், மக்காத கழிவுகளை ஊதா நிற தொட்டியிலும், சுகாதாரக் கழிவுகளை சிவப்பு நிற தொட்டியிலும், வீட்டு அபாயகரமான கழிவுகளை கருப்பு நிற தொட்டியிலும் வழங்க வேண்டும் என பொதுமக்களுக்கு விளக்கப்பட்டது.

நகராட்சி ஆணையர் குமரன், நகர்நல அலுவலர் டாக்டர் மணிவேல் ஆகியோரது உத்தரவின்பேரில், 19-வது வார்டுக்கு உட்பட்ட வேளாளர் காலனி, பூங்கா நகர் பகுதியில் இந்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

முகாமில் துப்புரவு அலுவலர் சோழராஜ் கலந்து கொண்டு, கழிவுகளை நான்கு வகைகளாக பிரிப்பது, ஒவ்வொரு வகை கழிவுகளையும் எந்த நிற தொட்டியில் வழங்க வேண்டும் என்பது குறித்து பொதுமக்களுக்கு விளக்கினார்.

சேலம் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனரக அலுவலகத்தைச் சேர்ந்த தூய்மை பாரத திட்ட அலுவலர் ராஜேஸ்வரியும் முகாமில் கலந்து கொண்டு, கழிவு மேலாண்மை தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

தூய்மை பாரத திட்ட பரப்புரையாளர்கள் கலை, சிவன், ஆனந்தி, மஞ்சுளா, மாரியம்மாள் ஆகியோர் நான்கு வகை கழிவுகளுக்கான தொட்டிகளை பொதுமக்களின் பார்வைக்கு வைத்து, அவற்றில் எந்தெந்த கழிவுகளை சேகரிக்க வேண்டும் என்பது குறித்து விளக்கினர்.

திருச்செங்கோடு நகராட்சியில் 19, 25 மற்றும் 28-வது வார்டுகள் முன்மாதிரி வார்டுகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த வார்டுகளில் வீடுகள் தோறும் 100 சதவீதம் கழிவுகளை சேகரிப்பதுடன், பொதுமக்களும் கழிவுகளை முழுமையாக தரம் பிரித்து வழங்கும் வகையில் திடக்கழிவு மேலாண்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

About The Author