
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோயிலில் ஆதி நாகேஸ்வரருக்கு 25-வது ஆண்டாக 108 பால்குட அபிஷேகம் மற்றும் 108 திருவிளக்கு கூட்டு வழிபாடு நடைபெற்றது.
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோயிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முன்னதாக ராஜகோபுரத்தில் இருந்து 7 குழந்தைகளை அழைத்து வரும் ஸ்ரீ கன்னிமார் அழைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்கள் 108 பால்குடங்களை எடுத்து வந்தனர்.
பின்னர் ஆதி நாகேஸ்வரருக்கு 108 பால்குடங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
மேலும், திருமணத்தடை, குழந்தைப்பேறு, தொழில் மற்றும் கல்வியில் ஏற்படும் தடைகள், வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் நீங்க வேண்டி பக்தர்கள் பிரார்த்தனை செய்தனர்.
இதையடுத்து ஸ்ரீ மகாலட்சுமி அஷ்டோத்திரத்துடன் ஆண்கள் மற்றும் பெண்கள் பங்கேற்ற 108 திருவிளக்கு கூட்டு வழிபாடு நடைபெற்றது.
ஆதி நாகேஸ்வரரை வழிபட்டால் நாக தோஷம், காலசர்ப்ப தோஷம் உள்ளிட்ட பல்வேறு தோஷங்கள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இதையொட்டி நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.