32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot

ரூ.2 கோடி மோசடி புகார், ஈரோடு தனியார் கல்லூரி முதல்வர் கைது.

Editor Published: August 20, 2026 2 நிமிட வாசிப்பு Breaking News
எழுத்து அளவு:

டிஎன்பிஎஸ்சியில் உறுப்பினர் பதவி வாங்கித் தருவதாகக் கூறி, அரசுக் கல்லூரி பேராசிரியரிடம் ரூ.2 கோடி பெற்றதாக கூறப்படும் மோசடி வழக்கில், ஈரோட்டைச் சேர்ந்த தனியார் கல்லூரி முதல்வரை நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் வீரப்பன்சத்திரத்தைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் (48). தனியார் கல்லூரிகளில் பேராசிரியர் மற்றும் முதல்வராக பணியாற்றி வந்துள்ளார்.

இந்த நிலையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சியில் தனக்கு தொடர்பு இருப்பதாகவும், விருப்பமுள்ளவர்களுக்கு உறுப்பினர் பதவி பெற்றுத் தர முடியும் என்றும் சுரேஷ்குமார் நெருக்கமானவர்களிடம் கூறியதாக தெரிகிறது.

இதுகுறித்து நண்பர்கள் மூலம் அறிந்த நாமக்கல் மாவட்டம் புதுச்சந்தையைச் சேர்ந்த அரசுக் கல்லூரி பேராசிரியர் மாணிக்கவாசன், தனது மனைவிக்கு டிஎன்பிஎஸ்சி உறுப்பினர் பதவி பெற்றுத் தருமாறு சுரேஷ்குமாரை அணுகியதாக கூறப்படுகிறது.

இதற்காக சுரேஷ்குமார் கேட்ட ரூ.2 கோடி தொகையை மாணிக்கவாசன் வழங்கியதாகவும், பணத்தை பெற்றுக்கொண்ட பின்னர் உறுப்பினர் பதவி பெற்றுத் தராமல் சுரேஷ்குமார் காலம் தாழ்த்தியதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து மாணிக்கவாசன் நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், ஈரோட்டுக்குச் சென்று சுரேஷ்குமாரை கைது செய்தனர்.

பலரிடம் கோடிக்கணக்கில் பணம் வசூல்?

கைது செய்யப்பட்ட சுரேஷ்குமாரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், சென்னையைச் சேர்ந்த ஒருவர் மூலம் டிஎன்பிஎஸ்சி உறுப்பினர் பதவி பெற்றுத் தருவதாகக் கூறி மேலும் பலரிடம் கோடிக்கணக்கில் பணம் பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி, சேலத்தைச் சேர்ந்த பெண்ணிடம் ரூ.1 கோடி, தர்மபுரியைச் சேர்ந்த ஒருவரிடம் ரூ.70 லட்சம், திருச்செங்கோட்டைச் சேர்ந்த ஒருவரிடம் ரூ.1 கோடி மற்றும் சென்னையைச் சேர்ந்த ஒருவரிடம் ரூ.50 லட்சம் பெற்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக சுரேஷ்குமாரிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், அவர் குறிப்பிட்டதாக கூறப்படும் சென்னையைச் சேர்ந்த நபரையும் கைது செய்து விசாரிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த வழக்கில் மேலும் பல முக்கிய தகவல்கள் வெளியாக வாய்ப்புள்ளதாக குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

About The Author