32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot

திருச்செங்கோட்டில் வெளுத்து வாங்கிய கனமழை: எம்.எல்.ஏ. அலுவலகத்தை சூழ்ந்த மழைநீர்.

Editor Published: August 24, 2026 2 நிமிட வாசிப்பு திருச்செங்கோடு
எழுத்து அளவு:

திருச்செங்கோடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று மாலை ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

திருச்செங்கோடு பகுதியில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வந்த நிலையில், நேற்று மாலை திடீரென கருமேகங்கள் சூழ்ந்து கனமழை பெய்யத் தொடங்கியது. தொடர்ந்து பெய்த மழையால் நகரின் பல்வேறு சாலைகளில் மழைநீர் தேங்கி வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.

குறிப்பாக, திருச்செங்கோடு எம்.எல்.. அலுவலகம் அமைந்துள்ள சாலையில் மழைநீர் அதிகளவில் தேங்கியதுடன், அலுவலகத்தையும் மழைநீர் சூழ்ந்தது. இதனால் அப்பகுதியில் வாகனப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

சாக்கடை வாய்க்கால்கள் தூர்வாரப்படாததால் பாதிப்பு

திருச்செங்கோடு நகரப் பகுதிகளில் சாக்கடை வாய்க்கால்கள் முறையாக தூர்வாரப்படாததால், மழைநீர் சீராக வெளியேற முடியாமல் சாலைகளில் தேங்கி நிற்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

பட்டறைமேடு, கொல்லப்பட்டி, கூட்டப்பள்ளி, செங்கோடம்பாளையம், தோக்கவாடி, குமரமங்கலம், சீதாராம்பாளையம், மாணிக்கம்பாளையம், மண்டகப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்தது.

மழையின்போது வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி வாகனங்களை இயக்கினர். திருமணம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்குச் சென்ற பொதுமக்களும் மழையால் சிரமத்துக்குள்ளாகினர்.

நகரில் மழைநீர் தேங்குவதைத் தடுக்க, சாக்கடை வாய்க்கால்களை முறையாக தூர்வாரி, மழைநீர் தடையின்றி வெளியேறும் வகையில் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மழைக்காக நடைபெற்ற சிறப்பு பூஜைகள்

இதனிடையே, நீண்ட நாட்களாக மழையின்றி திருச்செங்கோடு பகுதியில் வறட்சி நிலவி வந்த நிலையில், இரு தினங்களுக்கு முன்பு திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோயிலில் உள்ள நல்லீஸ்வரர் சன்னதியில் மழை வேண்டி சிறப்பு யாகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன.

மேலும், நந்தியம்பெருமானை நீர் நிறைந்த தொட்டியில் எழுந்தருளச் செய்து, நல்லீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தற்போது பெய்த கனமழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு கனமழை பெய்ததால் விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்தனர். கனமழைக்கு பின்னரும் தொடர்ந்து தூறல் மழை பெய்து வந்தது.

About The Author