32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot

திருச்செங்கோடு தீயணைப்பு வீரர்களுக்கு ரூ.4.33 கோடியில் குடியிருப்புகள்- காணொலி மூலம் திறந்து வைத்தார் முதலமைச்சர் விஜய்.

Editor Published: August 27, 2026 2 நிமிட வாசிப்பு திருச்செங்கோடு
எழுத்து அளவு:

திருச்செங்கோடு சாலப்பாளையம் தீயணைப்பு நிலைய வளாகத்தில் தீயணைப்பு துறை பணியாளர்களுக்காக ரூ.4 கோடியே 33 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 14 குடியிருப்புகள் திறக்கப்பட்டன.

திருச்செங்கோடு நகராட்சி 14-வது வார்டுக்கு உட்பட்ட சாலப்பாளையத்தில் தீயணைப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு பணியாற்றும் நிலைய அலுவலர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு நிலைய வளாகத்திலேயே குடியிருப்புகள் அமைக்க வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

இதையடுத்து தீயணைப்பு நிலையத்தின் பின்புறம் உள்ள சுமார் 56 சென்ட் இடம் தேர்வு செய்யப்பட்டு, அங்கிருந்த பாறைகள் அகற்றப்பட்டு நிலம் சமன்படுத்தப்பட்டது. பின்னர் இரண்டு நிலைய அலுவலர் குடியிருப்புகள் மற்றும் 12 தீயணைப்பு வீரர் குடியிருப்புகள் என மொத்தம் 14 குடியிருப்புகள் கட்ட திட்டமிடப்பட்டது.

தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகம் சார்பில் ரூ.4 கோடியே 33 லட்சம் மதிப்பீட்டில் இதற்கான நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது. கட்டுமானப் பணிகள் கடந்த 2025-ம் ஆண்டு மார்ச் 3-ம் தேதி தொடங்கின.

நிலைய அலுவலர்களுக்கான இரண்டு குடியிருப்புகள் தலா இரண்டு தளங்களுடன் மொத்தம் 186.04 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளன. மேலும், தீயணைப்பு வீரர்களுக்காக தலா 750 சதுர அடி பரப்பளவில் மூன்று தளங்களைக் கொண்ட 12 குடியிருப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

கட்டுமானப் பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து, புதிய குடியிருப்புகளை தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

இதையொட்டி சாலப்பாளையம் தீயணைப்பு நிலைய வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நாமக்கல் மாவட்ட கலெக்டர் மதுபாலன் குத்துவிளக்கேற்றி வைத்தார்.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழக செயற்பொறியாளர் கி.சீனிவாசன், இளநிலை பொறியாளர் அ.இன்பராசு, தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறை உதவி மாவட்ட அலுவலர்கள் தே.ஆனந்த், ச.தவமணி, நிலைய போக்குவரத்து அலுவலர் ப.சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

About The Author