32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot

குமாரபாளையம் நகராட்சி கூட்டத்தில் வார்டு ஆய்வுக்கு மின்சார வாகனம் வழங்க கோரிக்கை.

Editor Published: August 28, 2026 2 நிமிட வாசிப்பு குமாரபாளையம்
எழுத்து அளவு:

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்சியின் சாதாரண நகர்மன்றக் கூட்டம், நகர்மன்றத் தலைவர் விஜய கண்ணன் தலைமையிலும், நகராட்சி ஆணையாளர் ரமேஷ் முன்னிலையிலும் நடைபெற்றது.

கூட்டத்தில் நகர்மன்ற உறுப்பினர்கள் தங்களது வார்டுகளில் நிலவும் பல்வேறு பிரச்னைகள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து பேசினர்.

அப்போது அதிமுக நகர்மன்ற உறுப்பினர் பாலசுப்பிரமணி பேசுகையில், தங்களது வார்டுகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் பல்வேறு கோரிக்கைகள் குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்து வருவதாகவும், ஆனால் அதற்கான நடவடிக்கைகள் முறையாக மேற்கொள்ளப்படவில்லை என்றும் குற்றம்சாட்டினார். நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் உரிய நடவடிக்கை இல்லாததால், அனைத்து நகர்மன்ற உறுப்பினர்களையும் ஒருங்கிணைத்து மாவட்ட கலெக்டரை சந்தித்து புகார் அளிக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும், குமாரபாளையம் நகரின் முக்கிய கழிவுநீர் வழித்தடமாக உள்ள கோம்புபள்ளம் பகுதியில் அதிகளவில் செடி, கொடிகள் மற்றும் மரங்கள் வளர்ந்துள்ளதால் நீர்வழித்தடம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். மழைக்காலங்களில் மழைநீர் சீராக செல்ல முடியாமல் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகும் அபாயம் உள்ளதால், அப்பகுதியில் வளர்ந்துள்ள செடி, கொடிகள் மற்றும் மரங்களை அகற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.

இதையடுத்து பேசிய நகர்மன்றத் தலைவர் விஜய கண்ணன், நகரில் சேகரிக்கப்படும் குப்பைகள் சில இடங்களில் கொட்டப்பட்டு தீ வைத்து எரிக்கப்படுவதால் சுற்றுச்சூழல் மற்றும் பொதுமக்களின் சுகாதாரம் பாதிக்கப்படுவதாக தெரிவித்தார். குப்பைகளை திறந்தவெளியில் எரிப்பதை தடுக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆணையாளரிடம் கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து பேசிய திமுக நகர்மன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் வழங்கப்படுவது போன்று, நகர்மன்ற உறுப்பினர்கள் தங்களது வார்டு பகுதிகளை நேரில் சென்று ஆய்வு செய்து பொதுமக்களின் பிரச்னைகளை அறிந்து கொள்வதற்கு மின்சார வாகனம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

நகர்மன்றக் கூட்டத்தில் வார்டு பிரச்னைகள், கழிவுநீர் கால்வாய் பராமரிப்பு, குப்பை மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து உறுப்பினர்கள் விவாதித்தனர்.

About The Author