
காவிரி பாசன வாய்க்கால்களில் தண்ணீர் திறக்கக் கோரி பரமத்தி வேலூரில் நாளை நடைபெறும் முழு கடையடைப்பு போராட்டத்திற்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் காவிரி தடுப்பணையில் இருந்து ராஜாவாய்க்கால், குமாரபாளையம் வாய்க்கால், மோகனூர் வாய்க்கால், பள்ளவாய்க்கால், பொய்யேறி வாய்க்கால் என 5 பாசன வாய்க்கால்கள் மூலம் 16,200 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
இந்த பகுதிகளில் வெற்றிலை, வாழை, கரும்பு, பாக்கு, கோரை உள்ளிட்ட நீண்டகால பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக ராஜாவாய்க்கால் பகுதியில் 5,000 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பில் வெற்றிலை சாகுபடி நடைபெற்று வருகிறது. வெற்றிலை பயிருக்கு தினசரி தண்ணீர் பாய்ச்ச வேண்டிய நிலை உள்ளது.
இந்நிலையில், 5 பாசன வாய்க்கால்களிலும் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பயிர்கள் வாடி வருவதுடன், விவசாயிகளுக்கு பெரும் பொருளாதார இழப்பு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
தண்ணீர் திறக்கக் கோரி விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியும், இதுவரை பாசன வாய்க்கால்களில் தண்ணீர் திறக்கப்படவில்லை.
கடையடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு
இதையடுத்து, பாசன வாய்க்கால்களில் உடனடியாக தண்ணீர் திறக்க வலியுறுத்தி, பரமத்தி வேலூரில் நாளை ஆக.20 ம் தேதி விவசாயிகள் சங்கங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் நடைபெறும் முழு கடையடைப்பு போராட்டத்திற்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தனது முழு ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது.
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து, 5 பாசன வாய்க்கால்களிலும் தண்ணீர் திறக்க வேண்டும் என அந்த அறிக்கையில் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.