
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று மாலை ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பெய்த மழையால், பள்ளிபாளையம் பிரிவு பகுதியில் சாக்கடை கழிவுநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.
குமாரபாளையம் பகுதியில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வந்த நிலையில், நேற்று மாலை திடீரென கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்யத் தொடங்கியது. சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பெய்த மழை, காவேரி நகர், குப்பாண்டபாளையம், வட்டமலை, வளையக்காரனூர், கோட்டைமேடு, பல்லக்காபாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும் பெய்தது.
மழை காரணமாக பள்ளிபாளையம் பிரிவு பகுதியில் சாக்கடை கால்வாய்கள் நிரம்பி, கழிவுநீர் சேலம் மற்றும் ஈரோடு செல்லும் பிரதான சாலைகளில் வெளியேறியது. இதனால் சாலையில் கழிவுநீர் தேங்கியதுடன், அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து சென்ற பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகினர்.
மழைநீர் மற்றும் கழிவுநீர் சாலையில் தேங்காமல் தடுக்கும் வகையில் சாக்கடை கால்வாய்களை முறையாக தூர்வாரி பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனிடையே, மழையால் குமாரபாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.