
சேந்தமங்கலம் அருகே அதிமுக மாவட்ட பிரதிநிதி வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை, ரூ.17 லட்சம் ரொக்கம் மற்றும் 2 லேப்டாப்களை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்த காந்திபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கபாலி (51). அதிமுகவில் நாமக்கல் மாவட்ட பிரதிநிதியாக உள்ள இவர், ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார். இவரது மனைவி ஜோதி. மகன் சூர்யா (29), அதிமுக ஒன்றிய இளைஞர் அணி செயலாளராக உள்ளார்.
கபாலி குடும்பத்தினருக்கு குப்பநாயக்கனூர் பகுதியிலும் வீடு உள்ளது. அங்கு சூர்யா தனது மனைவியுடன் வசித்து வந்துள்ளார். சமீபத்தில் அவர்களுக்கு குழந்தை பிறந்ததால், சூர்யாவின் மனைவி தனது தாய் வீட்டில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கபாலி நேற்று அதிகாலை கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார்.
இதற்கிடையே, மதியம் 12.50 மணியளவில் குப்பநாயக்கனூரில் உள்ள வீட்டிற்கு சூர்யா சென்றுள்ளார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து தனது தந்தைக்கு தகவல் தெரிவித்துவிட்டு வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, பீரோவும் உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
பீரோவில் வைக்கப்பட்டிருந்த 20 பவுன் தங்க நகைகள், ரூ.17 லட்சம் ரொக்கம் மற்றும் 2 லேப்டாப்கள் திருடு போயிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து சேந்தமங்கலம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் அந்தோணி மைக்கேல் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். தகவலறிந்து மாவட்ட எஸ்.பி. மற்றும் டி.எஸ்.பி. உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர்.
மேலும், கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் வீட்டில் தடயங்கள் சேகரிக்கப்பட்டன. தொடர்ந்து, அருகில் உள்ள வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
அதில், நேற்று காலை 11 மணியளவில் முகத்தை துணியால் மறைத்தபடி 3 மர்ம நபர்கள் கபாலியின் வீட்டை நோக்கிச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் மற்றும் லேப்டாப்களை திருடிச் சென்ற 3 மர்ம நபர்களையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.