
குமாரபாளையம் காவிரி ஆற்றங்கரை சாலையோரத்தில் மருத்துவமனைகளில் பயன்படுத்தப்பட்ட மருந்து பாட்டில்கள், ஊசிகள் உள்ளிட்ட மருத்துவக் கழிவுகள் பாதுகாப்பின்றி வீசப்பட்டுள்ளதால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காவேரி நகர் பகுதியில் இருந்து ஈரோடு மாவட்டம் பவானி பேருந்து நிலையத்தை இணைக்கும் வகையில் காவிரி ஆற்றின் குறுக்கே சுமார் ஒரு கிலோமீட்டர் நீளத்திற்கு பாலம் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2011-ம் ஆண்டு விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கட்டப்பட்ட இந்த பாலம், சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்களுக்கு முக்கிய போக்குவரத்து வழித்தடமாக உள்ளது.
தினமும் ஏராளமான பொதுமக்கள் இந்த பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், பாலத்திற்கு செல்லும் சாலையோரத்தில் உள்ள முட்புதர் பகுதியில் மருத்துவமனைகளில் பயன்படுத்தப்பட்ட காலி மருந்து பாட்டில்கள், மருந்துகளை உடலில் செலுத்த பயன்படுத்தப்படும் ஊசிகள் மற்றும் மருத்துவப் பரிசோதனைக்கான மாதிரி சேகரிப்பு பாட்டில்கள் உள்ளிட்டவை பாதுகாப்பற்ற நிலையில் கொட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தொற்று நோய் பரவும் அபாயம்
பொதுமக்கள் அதிகளவில் நடமாடும் பகுதியில் மருத்துவக் கழிவுகள் இவ்வாறு பாதுகாப்பின்றி கொட்டப்பட்டிருப்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, பயன்படுத்தப்பட்ட ஊசிகளை யாரேனும் தவறுதலாக மிதித்தால் காயம் ஏற்படுவதுடன், தொற்று நோய் பரவும் அபாயமும் இருப்பதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த பகுதியில் கால்நடைகள் மேய்ச்சலுக்காக வந்து செல்வதால், மருந்து பாட்டில்கள் மற்றும் மருத்துவக் கழிவுகளை அவை மிதிக்கும் அல்லது அறியாமல் வாயில் எடுத்துச் செல்லும் அபாயமும் உள்ளது.
உடனடியாக அகற்ற கோரிக்கை
எனவே, சாலையோரத்தில் பாதுகாப்பின்றி கொட்டப்பட்டுள்ள பயன்படுத்திய ஊசிகள், மருந்து பாட்டில்கள் உள்ளிட்ட மருத்துவக் கழிவுகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக அகற்ற வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், மருத்துவக் கழிவுகளை முறையாக சேகரித்து, விதிமுறைகளின்படி பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்தாமல் பொது இடங்களில் கொட்டுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.