32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot

பால் கொள்முதல் விலை ரூ.3 உயர்வு: பால் உற்பத்தியாளர்கள் ஏமாற்றம்.

Editor Published: August 19, 2026 2 நிமிட வாசிப்பு குமாரபாளையம்
எழுத்து அளவு:

தமிழக முதல்வர் 110 விதியின் கீழ் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தி அறிவித்துள்ள நிலையில், இந்த உயர்வு பால் உற்பத்தியாளர்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாக பால் உற்பத்தியாளர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் பெருமாள் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

தமிழக முதல்வர் இன்று சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் பால் உற்பத்தியாளர்களுக்கு லிட்டருக்கு ரூ.1 கொள்முதல் விலை உயர்வும், ரூ.2 ஊக்கத்தொகையும் என மொத்தம் ரூ.3 உயர்வு வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

பால் உற்பத்தியாளர்கள் லிட்டருக்கு ரூ.10 கொள்முதல் விலை உயர்வுடன், ரூ.10 ஊக்கத்தொகை என மொத்தம் ரூ.20 உயர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால், ரூ.3 மட்டுமே உயர்த்தியிருப்பது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2022-ம் ஆண்டு 3.3 சதவீத கொழுப்புள்ள பால் மற்றும் 4.4 சதவீத கொழுப்புள்ள பாலுக்கு லிட்டருக்கு ரூ.30 கொள்முதல் விலை வழங்கப்பட்டு வந்தது. அதன் பின்னர் நீண்ட காலமாக போதிய அளவில் விலை உயர்த்தப்படாத நிலையில், கடந்த ஆண்டு ரூ.3 உயர்த்தப்பட்டு ரூ.38 வழங்கப்பட்டு வந்ததாகவும், தற்போது மேலும் ரூ.3 உயர்த்தப்பட்டு லிட்டருக்கு ரூ.41 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தீவன விலை உயர்வால் பாதிப்பு

கால்நடை தீவனங்களின் விலை 100 சதவீதம் வரை உயர்ந்துள்ள நிலையில், பால் கொள்முதல் விலையில் ரூ.3 மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது பால் உற்பத்தியாளர்களுக்கு போதுமானதாக இல்லை.

தனியார் பால் நிறுவனங்கள் பால் உற்பத்தியாளர்களுக்கு ஆவினை விட கூடுதலாக விலை வழங்கி, பொதுமக்களிடம் அதிக விலைக்கு பாலை விற்பனை செய்து வருகின்றன. இதனால் ஆவின் நிறுவனத்துக்கு வரும் பால் அளவும் குறைந்து வருவதாக பெருமாள் தெரிவித்தார்.

ஆவின் நிறுவனத்துக்கு தினசரி பால் மாதிரிகள் வரத்து குறைந்துள்ள நிலையில், தற்போது சுமார் 35 லட்சம் லிட்டர் பால் மட்டுமே கொள்முதல் செய்யப்படுவதாகவும், பொதுமக்களின் தேவையை பூர்த்தி செய்ய கூடுதல் பாலை தனியார் நிறுவனங்களிடம் இருந்து அதிக விலை கொடுத்து வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

எனவே, பால் உற்பத்தியாளர்களின் நலனை கருத்தில் கொண்டு, பால் கொள்முதல் விலையை அரசு மறுபரிசீலனை செய்து உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என பால் உற்பத்தியாளர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் பெருமாள் கோரிக்கை விடுத்துள்ளார்.

About The Author