32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot

ராஜவாய்க்காலில் தண்ணீர் திறக்கக் கோரி வணிகர்கள் கடையடைப்பு.

Editor Published: August 20, 2026 2 நிமிட வாசிப்பு பரமத்திவேலூர்
எழுத்து அளவு:

ஜேடர்பாளையம் தடுப்பணையில் இருந்து ராஜவாய்க்காலுக்கு தண்ணீர் திறக்கக் கோரி விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, பரமத்தி வேலூரில் வணிகர்கள் இன்று ஒரு நாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் வேலூர் பகுதியில் 1,000-க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டுள்ளன.

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே ஜேடர்பாளையம் தடுப்பணையில் இருந்து ராஜவாய்க்காலுக்கு வழங்கப்பட்டு வந்த பாசன நீர், கடந்த 22 நாட்களுக்கு முன்பு எவ்வித முன்னறிவிப்புமின்றி நிறுத்தப்பட்டதாக விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

ராஜவாய்க்கால் பாசனத்தை நம்பி சுமார் 30 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வெற்றிலை, வாழை, கோரை, மரவள்ளிக்கிழங்கு, கரும்பு உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. தண்ணீர் வரத்து நிறுத்தப்பட்டுள்ளதால் பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக வெற்றிலை சாகுபடியில் ஒரு ஏக்கருக்கு ஆண்டுக்கு பல லட்சம் ரூபாய் வரை செலவு செய்து வரும் நிலையில், தண்ணீர் இல்லாததால் பயிர்கள் பாதிக்கப்பட்டு விவசாயிகளுக்கு பெரும் பொருளாதார இழப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

பேச்சுவார்த்தையில் உடன்பாடு இல்லை

ராஜவாய்க்காலில் பாசனத்திற்காக தண்ணீர் திறக்க வலியுறுத்தி விவசாயிகள் பரமத்தி வேலூர் நீர்வளத்துறை அலுவலகத்தில் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் பல்வேறு கட்ட போராட்டங்களை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக சாலை மறியல் போராட்டமும் நடைபெற்றது.

இந்நிலையில், விவசாயிகளின் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து பரமத்தி வேலூர் வணிகர் சங்கம் சார்பில் இன்று ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

ரூ.2 கோடிக்கு மேல் வர்த்தக இழப்பு?

கடையடைப்பு காரணமாக வேலூர் பகுதியில் 1,000-க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும், அன்றாட வர்த்தக நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

ஒருநாள் கடையடைப்பு காரணமாக ரூ.2 கோடிக்கும் மேல் வர்த்தக இழப்பு ஏற்படக்கூடும் என வணிகர் சங்கத் தலைவர் சுந்தரம் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, விவசாயிகள் சங்கம் சார்பில் இன்று காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை உண்ணாவிரதப் போராட்டமும் நடைபெற உள்ளது.

ராஜவாய்க்காலில் உடனடியாக தண்ணீர் திறந்து, பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள பயிர்களை பாதுகாக்க வேண்டும் என்பதே விவசாயிகள் மற்றும் வணிகர்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.

About The Author