
நாமக்கல் மாவட்டத்தின் இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலாத்தலமான கொல்லிமலையில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையால் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் சுதந்திர தினம் மற்றும் வார விடுமுறையை முன்னிட்டு கொல்லிமலைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர்.
மூலிகை வளம் நிறைந்த கொல்லிமலை, சித்தர்கள் தவம் செய்த இடமாகவும் கருதப்படுகிறது. இதனால் தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் கொல்லிமலைக்கு வருவது வழக்கம்.
கொல்லிமலையின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி முக்கிய இடம் பிடித்துள்ளது. சுமார் 1,300 படிக்கட்டுகளை கடந்து சென்றால், 300 அடி உயரத்தில் இருந்து ஆர்ப்பரித்து கொட்டும் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியை காண முடியும்.
இதேபோல் மாசிலா அருவி, நம் அருவி உள்ளிட்ட அருவிகளும் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகின்றன. கடந்த 30 நாட்களுக்கும் மேலாக போதிய நீர்வரத்து இல்லாததால் சில அருவிகளுக்கு செல்லும் பாதைகள் மூடப்பட்டிருந்தன.
இந்த நிலையில், கொல்லிமலை சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த வாரம் முழுவதும் பெய்த மழையால் தற்போது அருவிகளில் மீண்டும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் உற்சாகமடைந்துள்ளனர்.
சுதந்திர தினம் மற்றும் வார விடுமுறையை முன்னிட்டு கொல்லிமலைக்கு வந்த சுற்றுலா பயணிகள் அரப்பளீஸ்வரர் கோயில், எட்டுக்கை அம்மன் கோயில், மாசி பெரியசாமி கோயில் உள்ளிட்ட இடங்களில் சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து அருவிகளில் குளித்தும், சீக்குப்பாறை முனையம் மற்றும் வாசலூர்பட்டி படகு இல்லத்தில் படகு சவாரி செய்தும் மகிழ்ந்தனர்.
சுற்றுலா முடிந்து திரும்பும் பயணிகள் சோளக்காடு பகுதியில் உள்ள பழங்குடியினர் சந்தையில் பலாப்பழம், அன்னாசி, மலைவாழைப்பழம் உள்ளிட்ட கொல்லிமலையின் விளைபொருட்களை ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.
மழையால் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், கொல்லிமலைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.