திருச்செங்கோடு தாலுகா, புத்தூர் கீழ்முகம் கிராமத்தில் உள்ள சர்வே எண் 56/3A இடம் அரசு ஆவணங்களில் நீர்நிலையாக பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அந்த இடத்தில் வண்டல் மண் கொட்டுவதற்கு திருச்செங்கோடு தாசில்தார் தரப்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், நீர்நிலையாக பதிவாகியுள்ள இடத்தில் மண் கொட்ட அனுமதி வழங்கியது சட்ட விதிகளுக்கும், நீர்நிலை பாதுகாப்பு கொள்கைக்கும் எதிரானது எனவும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்த அனுமதியை உடனடியாக ரத்து செய்து, நீர்நிலையை முழுமையாக பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி, சமூக ஆர்வலரும், பத்து ரூபாய் இயக்க நீர்நிலை பாதுகாப்புக் குழுவின் மாவட்ட செயலாளருமான பூபதி, கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி புத்தூர் கிழக்கு கிராமத்தில் உள்ள தனது வீட்டில் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார். தற்போது 5-வது நாளாக போராட்டம் தொடர்ந்து வருகிறது.
போராட்டத்தில், பூபதி அதிகாரிகளிடம் அளித்துள்ள மனுக்கள் மற்றும் ஆவணங்கள் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும், உயர்நீதிமன்ற உத்தரவுப்படி மாவட்ட உயர்மட்டக் குழு அமைத்து விசாரணை மேற்கொள்ள வேண்டும், விசாரணையில் கண்டறியப்படும் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், நீர்நிலைகள் தொடர்பாக பொதுமக்கள் அளிக்கும் மனுக்களை உடனடியாக விசாரித்து, சட்டப்படி நடவடிக்கை எடுத்து எழுத்துப்பூர்வமாக பதில் வழங்க வேண்டும். நீதிமன்றத் தீர்ப்புகள், அரசாணைகள் மற்றும் RSO விதிகளை முழுமையாக அமல்படுத்தி நீர்நிலைகளை நிரந்தரமாக பாதுகாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
5-வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு பல்வேறு அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.