vmtalks.com ⚡ AMP

திருச்செங்கோட்டில் தங்க நகை மோசடி புகார்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

By Editor | Jul 26, 2026

திருச்செங்கோடு நகராட்சி 7-வது வார்டு, தொண்டிக்கரடு பகுதியைச் சேர்ந்த நடராஜன் என்பவர், தனது 11¾ பவுன் (சுமார் 94 கிராம்) தங்க நகையை ரூ.2.50 லட்சம் கடனுக்காக அடமானமாக வழங்கியதாகவும், பின்னர் பணத்தை திருப்பிச் செலுத்திய பிறகும் நகையை மீண்டும் வழங்க மறுப்பதாகவும் புகார் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்கள் தன்னை சாதிப் பெயரை கூறி அவமதித்ததுடன், தாக்கியும் மிரட்டியும் தங்க நகையை மோசடி செய்ததாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக காவல் நிலையம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யவும், பாதிக்கப்பட்டவரின் தங்க நகையை மீட்டுத் தரவும், உரிய சட்ட நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி, இன்று திருச்செங்கோடு அண்ணா சிலை அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டம் நகரச் செயலாளர் சுகுமார் தலைமையில் நடைபெற்றது. இதில், நாமக்கல் மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் அன்புமணி, கட்சியின் மூத்த வழக்கறிஞர் ப.பா. மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

மேலும், குமாரபாளையம், வெண்ணந்தூர், ராசிபுரம், நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் தங்களது கண்டன உரைகளை நிகழ்த்தினர்.

விரைவில் வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், மாவட்ட மற்றும் மாநில அளவில் போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என போராட்டத்தில் பங்கேற்றவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.