200 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியம் கொண்ட இந்தக் கோவிலில், திருவிழாவின்போது ஆண்கள் மட்டுமே பங்கேற்று வழிபாடு நடத்துவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த ஆண்டும் பூச்சாட்டுடன் விழா தொடங்கிய நிலையில், பொங்களாயி அம்மன் மற்றும் விநாயகர் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், ஆராதனை, படையல் மற்றும் பொங்கல் வைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இதனைத் தொடர்ந்து, பக்தர்கள் நேர்த்திக்கடனாக கொண்டு வந்த கிடாக்களுக்கு பூஜை செய்யப்பட்டு, பாரம்பரிய முறையில் பலி கொடுக்கப்பட்டது. பின்னர், இரவு முழுவதும் கிடா இறைச்சி சமைக்கப்பட்டு, அதிகாலை நடைபெற்ற சமபந்தி விருந்தில் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
திருவிழாவிற்காக 240 கிடாக்கள் பயன்படுத்தப்பட்டதுடன், சுமார் 2,000 கிலோ இறைச்சி மற்றும் 500 கிலோக்கும் மேற்பட்ட அரிசியில் பொங்கல் தயாரிக்கப்பட்டு, ஆண்களுக்கு மட்டும் அசைவ சமபந்தி விருந்து வழங்கப்பட்டது.
சேலம், கரூர், திருச்சி, தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், சுற்றுவட்டார பகுதிகளிலிருந்தும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்கள் இந்த திருவிழாவில் பங்கேற்றனர்.
இதுகுறித்து கோவில் தர்மகர்த்தா செல்வராஜ் கூறுகையில், “பல ஆண்டுகளுக்கு முன்பு கனமழை காலத்தில் பிரசவத்தின் போது ஏற்பட்ட ஒரு சம்பவத்துடன் தொடர்புடைய உள்ளூர் ஐதீகத்தின் அடிப்படையில், பெண்கள் இந்த வழிபாட்டில் பங்கேற்காமல், ஆண்கள் மட்டுமே வழிபாடு நடத்த வேண்டும் என்ற மரபு உருவானதாக நம்பப்படுகிறது. அதன்படி பல ஆண்டுகளாக ஆண்கள் மட்டுமே சமைத்து சமபந்தி விருந்து நடத்தும் வழக்கம் தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது” என்றார்.