vmtalks.com ⚡ AMP

ராசிபுரம் அருகே கார்–லாரி நேருக்கு நேர் மோதி விபத்து: பாட்டி, 2 வயது பேரன் பலி; 4 பேர் படுகாயம்

By Editor | Aug 13, 2026

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே கார்–லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பாட்டி மற்றும் 2 வயது பேரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர்.

சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே நாகியம்பட்டியைச் சேர்ந்த நடேசன் (60), அவரது மனைவி அமுதா (52), மகன் பிரவீன் (32), மருமகள் கோமதி (31) மற்றும் பேரன்கள் ஜிவித் (3), நிஜித் (2) ஆகிய 6 பேரும் ஆடி அமாவாசையை முன்னிட்டு ராசிபுரம் அருகே வையப்பமலை பகுதியில் உள்ள குலதெய்வக் கோவிலுக்கு சென்று விட்டு காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

காரை பிரவீன் ஓட்டிச் சென்ற நிலையில், மூலப்பள்ளிபட்டி அருகே எதிரே வந்த லாரியுடன் கார் மோதியது. இதில் கார் பலத்த சேதமடைந்தது.

விபத்தில் காரில் பயணம் செய்த அமுதா மற்றும் அவரது 2 வயது பேரன் நிஜித் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த நடேசன், பிரவீன், கோமதி மற்றும் 3 வயது குழந்தை ஜிவித் ஆகிய 4 பேரும் மீட்கப்பட்டு ராசிபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

உயிரிழந்த இருவரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன.

விபத்து குறித்து நாமகிரிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.