நாமக்கல் மாவட்டத்தில் போக்குவரத்து விதிமீறல்கள் மற்றும் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் நிறுவப்பட்டுள்ள ஏஎன்பிஆர் (ANPR – Automatic Number Plate Recognition) நவீன கண்காணிப்பு கேமராக்கள் விரைவில் செயல்பாட்டுக்கு வர உள்ளன.
இதுதொடர்பாக, நாமக்கல்–சேலம் ரோடு சந்திப்பில் ஏஎன்பிஆர் கேமரா பொருத்தும் பணிகளை மாவட்ட போலீஸ் எஸ்.பி. யாதவ் கிரீஷ் அசோக் நேரில் ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் கூறுகையில், நாமக்கல் மாவட்டத்தில் போக்குவரத்து விதிமீறல்கள் மற்றும் குற்றச்செயல்களை தடுக்கும் வகையில் மாவட்ட போலீஸ் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.
அதன் ஒரு பகுதியாக, மாவட்ட எல்லைப் பகுதிகளான மல்லூர், வளையப்பட்டி, பரமத்தி வேலூர், பள்ளிபாளையம் மற்றும் நாமக்கல் மாநகர நுழைவுப் பகுதியான முதலைப்பட்டி ஆகிய 5 இடங்களில் ஏஎன்பிஆர் கேமராக்கள் பொருத்தும் பணி நிறைவடைந்துள்ளதாகவும், அவை விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்றும் தெரிவித்தார்.
இந்த கேமராக்கள் மூலம் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுதல், கார் ஓட்டும்போது சீட் பெல்ட் அணியாமல் பயணித்தல் உள்ளிட்ட போக்குவரத்து விதிமீறல்களை தானாகவே பதிவு செய்து, வாகன எண்ணை அடையாளம் கண்டு, அதற்கான அபராத விவரங்களை வாகன உரிமையாளர்களின் செல்போன் எண்ணுக்கு அனுப்பும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், குற்றச்செயல்களை கண்டறிந்து தடுக்கவும் இந்த நவீன கேமராக்கள் உதவிகரமாக இருக்கும் என்றார்.
இதற்கான கட்டுப்பாட்டு அறை நாமக்கல் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளதாகவும், முதல் கட்டமாக 5 இடங்களிலும், அடுத்த கட்டமாக மேலும் 15 இடங்களிலும் ஏஎன்பிஆர் கேமராக்கள் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றும் தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது ஏடிஎஸ்பி (சட்டம் ஒழுங்கு) மற்றும் நாமக்கல் டிஎஸ்பி ராஜேஷ்வரன் ஆகியோர் உடனிருந்தனர்.