vmtalks.com ⚡ AMP

மாற்று இடம் கேட்டு போராடும் மக்களை சந்தித்த டில்லிபாபு… அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக உறுதி.

By Editor | Jul 27, 2026

திருச்செங்கோடு அருகே இலுப்பிலி கிராமம் குளத்துவளவு பகுதியில், மாற்று இடம் கோரி போராடி வரும் பொதுமக்களை முன்னாள் அரூர் சட்டமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலத் தலைவருமான பி. டில்லிபாபு நேரில் சந்தித்து அவர்களது கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

இலுப்பிலி கிராமம் குளத்துவளவு பகுதியில் 30-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. குடியிருப்பை ஒட்டியுள்ள சுமார் 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய ஏரி, மழைக்காலங்களில் நிரம்பி வழிவதால் குடியிருப்பு பகுதிக்குள் மழைநீர் புகுந்து, வீடுகளின் சுவர்கள் சேதமடைவதுடன், சாலைகள் சகதியாக மாறி பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருவதாக கூறப்படுகிறது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

இதனால், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மாற்று இடம் வழங்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தலைமையில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம், ஏரியில் இறங்கி நூதன போராட்டம், பின்னர் பட்டை நாமம் பூசி அரைநிர்வாண போராட்டம் உள்ளிட்ட பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்றன.

பின்னர் ஆர்டிஓ லெனின் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களது கோரிக்கைக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

இந்த நிலையில், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த முன்னாள் அரூர் சட்டமன்ற உறுப்பினர் பி. டில்லிபாபு, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து, இந்த விவகாரத்தை தமிழக அரசின் கவனத்திற்கும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கும் கொண்டு சென்று, மாற்று இடம் பெற்றுத்தர தொடர்ந்து முயற்சி மேற்கொள்வதாக உறுதியளித்தார்.

மேலும், நாமக்கல் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து, பொதுமக்களின் கோரிக்கையான மாற்று இடம் வழங்குவது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவதாகவும் தெரிவித்தார்.

இந்த சந்திப்பின்போது மாவட்ட செயற்குழு உறுப்பினர் ந. வேலுசாமி, எலச்சிபாளையம் முன்னாள் கவுன்சிலர் சு. சுரேஷ், ஒன்றிய செயலாளர் ரமேஷ், ஒன்றிய குழு உறுப்பினர் பி. மாரிமுத்து, மாராப்பம்பாளையம் கிளைச் செயலாளர் பி. தங்கவேல், கிளைச் செயலாளர் லட்சுமி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.