திருச்செங்கோடு அருகே முட்டை லோடு ஏற்றி வந்த மினி டெம்போ பஞ்சாயத்து டேங்க் மீது மோதிய விபத்தில் டேங்க் சரிந்து விழுந்து டெம்போவில் வந்த இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அடுத்த வையப்பமலையில் இருந்து ஒசூருக்கு முட்டை லோடு ஏற்றிக் கொண்டு மினி டெம்போ சென்றது. டெம்போவை செக்காரப்பட்டி பகுதியைச் சேர்ந்த டிரைவர் சுபாஸ்(29) ஓட்டிச் சென்றார். அவருடன் லோடு மேன் முனியப்பம்பாளையம் பகுதியைச் சேர்ந்த குமார்(23) என்பவர் உடன் சென்றார். வாகனம் வையப்பமலை -மல்லசமுத்திரம் ரோட்டில் எஸ்.மேட்டுப்பாளையம், சத்தியா நகர் பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த டெம்போ ரோட்டின் ஓரமாக இருந்த 30 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட பஞ்சாயத்து வாட்டர் டேங்க் மீது மோதியது.
இந்த விபத்தில் டெம்போ மீது வாட்டர் டேங்க் சரிந்து விழுந்தது. இடிபாடுகளில் சிக்கி டெம்போவில் இருந்த சுபாஸ் மற்றும் குமார் ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து இரண்டு ஜேசிபி வாகனங்களின் உதவியுடன் கட்டிட இடிபாடுகளை அகற்றி இறந்தவர்களின் உடலை மீட்டனர். இந்த சம்பவம் குறித்து மல்லசமுத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். டேங்க் விழுந்து இருவர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.