vmtalks.com ⚡ AMP

திருச்செங்கோட்டில் பரபரப்பு: 24 ஆண்டுக்கு முந்தைய கூட்டுக்கொள்ளை வழக்கில் டாக்டர் உட்பட 8 பேருக்கு 10 ஆண்டு சிறை!

By Editor | Jul 22, 2026

 திருச்செங்கோட்டில் கடந்த 2002-ஆம் ஆண்டு வீடு புகுந்து பொருட்களை சூறையாடி, கத்தி முனையில் ஆவணங்களில் வலுக்கட்டாயமாக கையெழுத்து வாங்கிய வழக்கில், நாமக்கல்லைச் சேர்ந்த டாக்டர் ராஜ்குமார் மற்றும் அவரது கூட்டாளிகள் 7 பேருக்கு தலா 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து திருச்செங்கோடு கோர்ட் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.

திருச்செங்கோடு அடுத்த கூட்டப்பள்ளி காலனியை சேர்ந்தவர் பாண்டுரங்கன். இவருக்கும் நாமக்கல்லை சேர்ந்த டாக்டர் ராஜ்குமார் (54) என்பவருக்கும் கொடுக்கல் வாங்கல் மற்றும் வீடு அடமானம் தொடர்பாக சிவில் வழக்குகள் நிலுவையில் இருந்து வந்தன. இதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, கடந்த 2002 ம் ஆண்டு, டாக்டர் ராஜ்குமார் தலைமையில் சுமார் 40 பேர் கொண்ட கும்பல் பாண்டுரங்கன் வீட்டிற்குள் ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்தது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

பாண்டுரங்கன் மற்றும் அவரது குடும்பத்தினரை தாக்கிய அந்த கும்பல், கத்தி முனையில் மிரட்டி வெற்றுப் பத்திரங்களில் கையெழுத்து வாங்கியது. மேலும், வீட்டில் இருந்த சுமார் ரூ.5 லட்சம் மதிப்பிலான டிவி, கட்டில், டைனிங் டேபிள் உள்ளிட்ட தளவாடப் பொருட்களை டெம்போ லாரிகளில் ஏற்றிச் சென்று சூறையாடினர்.

இது குறித்து திருச்செங்கோடு டவுன் போலீசில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீசார் 38 பேர் மீது கூட்டுக்கொள்ளை, அத்துமீறி நுழைதல், மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு திருச்செங்கோடு டிஸ்டிரிக்ட் கோர்ட்டில் நீதிபதி டாக்டர். மாலதி முன்பு நடைபெற்று வந்தது. நீண்ட நெடிய விசாரணை காலத்தில் புகார்தாரர் பாண்டுரங்கன் மற்றும் வழக்கில் தொடர்புடைய சில எதிரிகள் இறந்துவிட்டனர்.

இந்த வழக்கில் நேற்று இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால், முதல் எதிரியான டாக்டர் ராஜ்குமார், மற்றும் அவரது கூட்டாளிகளான சிவக்குமார், செந்தில், மோகனசந்திரன், கமல் (எ) சீனி, சக்தி (எ) சத்தியமூர்த்தி உள்ளிட்ட 8 பேருக்கு கூட்டுக்கொள்ளை மற்றும் அத்துமீறி நுழைதல் ஆகிய பிரிவுகளின் கீழ் தலா 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

குற்றம் சாட்டப்பட்ட மற்றவர்கள் மீதான குற்றச்சாட்டு போதிய ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படாததால் அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

கோர்ட் வளாகத்தில் இந்த வழக்கு தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களை அங்கிருந்த நபர்கள் குற்றவாளிகளை படம் எடுக்க விடாமல் தடுத்து தாக்க முயன்றனர். அங்கிருந்த திருச்செங்கோடு டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் வளர்மதி தடுத்து அந்த நபர்களை எச்சரித்து அனுப்பி வைத்தார்.

சுமார் 24 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில், குற்றவாளிகளுக்கு தற்போது 10 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் திருச்செங்கோடு மற்றும் நாமக்கல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.