vmtalks.com ⚡ AMP

திருச்செங்கோட்டில் திராவிடர் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்: அருந்ததியருக்கு 6 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தல்!

By Editor | May 27, 2026

திருச்செங்கோட்டில் திராவிடர் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்: அருந்ததியருக்கு 6 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தல்!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில், அருந்ததியர் சமுதாயத்திற்கு 6 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கக் கோரியும், விவசாயிகளின் அனைத்து வங்கிக் கடன்களையும் தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும் திராவிடர் தமிழர் கட்சியின் சார்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

திராவிடர் தமிழர் கட்சியின் தொடக்க நாளை முன்னிட்டு இன்று திருச்செங்கோடு அண்ணா சிலை முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. கட்சியின் நிறுவனத் தலைவர் வெண்மணி தலைமையில் நடைபெற்ற இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில், பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

அருந்ததியர் சமுதாய மக்களுக்குத் தற்போது வழங்கப்பட்டு வரும் 3 சதவீத உள் இடஒதுக்கீட்டை 6 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும். உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் பட்டியல் சாதி பிரிவுகளை உடனடியாக வகைப்படுத்த வேண்டும். தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் விவசாயிகளுக்குக் கூட்டுறவு வங்கிகளில் உள்ள பயிர்க் கடன்களை மட்டுமே தற்போது தள்ளுபடி செய்துள்ளார். தேர்தல் வாக்குறுதியில் அவர் கூறியபடி, அனைத்து வங்கிகளிலும் விவசாயிகள் வாங்கிய கடன்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.

இந்த ஆர்ப்பாட்டம் குறித்துத் திராவிடர் தமிழர் கட்சியின் தலைவர் வெண்மணி கூறுகையில், “கட்சியின் தொடக்க நாளை முன்னிட்டு இன்று அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் அருந்ததியர் உள் இடஒதுக்கீட்டை 6 விழுக்காடாக உயர்த்தக் கோரியும், உச்சநீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்தக் கோரியும் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறோம். மேலும், முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு அளித்த வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டும்” என்று வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார்.

— VM TALKS செய்திகள்