vmtalks.com ⚡ AMP

திருச்செங்கோட்டில் அதிரடி: அதிக கட்டணம் வசூலித்த பஸ்களில் அதிகாரிகள் சோதனை!

By Editor | Jul 22, 2026

 நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இயங்கும் பஸ்களில், கடந்த இரு வாரங்களாக பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக அதிகாரிகளுக்குத் தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.

இதன் அடிப்படையில், திருச்செங்கோடு ஆர்டிஓ (பொறுப்பு) மாதவன் மற்றும் மோட்டார் இன்ஸ்பெக்டர் உமாமகேஸ்வரி ஆகியோர் இணைந்து, திருச்செங்கோடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த சோதனையின் போது, அந்த வழியாக வந்த 12-க்கும் மேற்பட்ட தனியார் பஸ்களை அதிகாரிகள் நிறுத்தி  ஆய்வு செய்தனர். பயணிகளிடம் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறதா? என்பது குறித்து பயணிகளிடமே நேரில் கேட்டறிந்தனர். இந்த ஆய்வில், விதிமுறைகளை மீறிய பஸ்களுக்கு அதிகாரிகளால் சோதனை அறிக்கை  வழங்கப்பட்டது.

இந்த நடவடிக்கை குறித்து திருச்செங்கோடு ஆர்டிஓ (பொறுப்பு) மாதவன் கூறுகையில், “பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிப்பதைத் தடுக்கும் வகையில் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, விதிமீறலில் ஈடுபடும் பஸ்களுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டு வருகிறது. பயணிகளின் நலன் கருதி இதுபோன்ற திடீர் சோதனைகள் இனி அடிக்கடி நடைபெறும்,” எனத் தெரிவித்தார்.