நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே நாமகிரிப்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட காரைக்கால், ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் கிராம மக்கள், செல்போன் டவர், குடிநீர், சாலை வசதி மற்றும் பட்டா வழங்கக் கோரி நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் மாதேஸ்வரனிடம் கோரிக்கை விடுத்தனர்.
காரைக்கால், ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் செல்போன் இணைப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போதுமான அளவில் இல்லாததால், செல்போன் டவர் அமைக்க வேண்டும் என்றும், குடிநீர் மற்றும் சாலை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்றும், தகுதியானவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்றும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த கோரிக்கைகள் தொடர்பாக, பாரம்பரிய உழவர் நல சங்கத் தலைவர் ஜெகதீசன் தலைமையில் கிராம மக்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்திருந்தனர்.
கிராம மக்களை நேரில் சந்தித்த எம்.பி.
இந்நிலையில், நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன் கிராம மக்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.
அப்போது செல்போன் டவர் அமைத்தல், குடிநீர் வசதி, சாலை வசதி மற்றும் பட்டா உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து கிராம மக்கள் எம்.பி.யிடம் தெரிவித்தனர்.
கிராம மக்களின் கோரிக்கைகளை மத்திய மற்றும் மாநில அரசுகளின் சம்பந்தப்பட்ட அமைச்சர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று, அவற்றை விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக எம்.பி. மாதேஸ்வரன் உறுதியளித்தார்.