vmtalks.com ⚡ AMP

அரசு பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம்: தனியார் பேருந்துகளுக்கும் மானியம் வழங்கினால் இலவச சேவை – உரிமையாளர்கள்.

By Editor | Sep 04, 2026

அரசு பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம் வழங்கப்படுவது போல், தனியார் பேருந்துகளில் பயணிக்கும் மகளிருக்கும் அரசு மானியம் வழங்கினால், அவர்களையும் இலவசமாக பயணிக்க அனுமதிக்க தயாராக இருப்பதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் தனியார் பேருந்து சங்க முன்னாள் பொருளாளரும், பேருந்து உரிமையாளருமான சங்கர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

இந்தியாவிலேயே தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் குறைந்த கட்டணத்தில் இயக்கப்படுகின்றன. கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் ஒரு கிலோமீட்டருக்கு ரூ.1-க்கும் அதிகமாக பேருந்து கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில், தமிழகத்தில் 58 பைசா மட்டுமே வசூலிக்கப்படுகிறது.

கொரோனா காலத்துக்கு முன்பு ரூ.68-ஆக இருந்த டீசல் விலை தற்போது ரூ.100- தாண்டியுள்ளது. இதேபோல் பேருந்துகளின் உதிரிபாகங்கள், பாடி, சேஸ் உள்ளிட்டவற்றின் விலையும், தொழிலாளர்களின் ஊதியமும் தொடர்ந்து உயர்ந்துள்ளன.

இந்நிலையில், அரசு பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம் வழங்கப்படும் என்ற அறிவிப்பு தனியார் பேருந்து உரிமையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசு பேருந்துகளில் மகளிருக்கு வழங்கப்படும் மானியத்தைப் போன்று, தனியார் பேருந்துகளில் பயணிக்கும் மகளிருக்கும் அரசு மானியம் வழங்கினால், நாங்களும் இலவசமாக பயணம் செய்ய அனுமதிப்போம் என சங்கர் தெரிவித்தார்.

தனியார் பேருந்துகள் இயக்கம் பாதிப்பு

கடந்த 8 ஆண்டுகளாக போக்குவரத்துத்துறையில் போதிய முன்னேற்றம் இல்லை என்றும், நாமக்கல் மாவட்டத்தில் சுமார் 70 தனியார் பேருந்துகளும், தமிழகம் முழுவதும் சுமார் 4,500 தனியார் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன என்றும் அவர் கூறினார்.

தனியார் பேருந்து தொழிலை நம்பி உரிமையாளர்கள் மட்டுமின்றி ஓட்டுநர்கள், நடத்துநர்கள், கிளீனர்கள் உள்ளிட்ட ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் வாழ்ந்து வருவதாகவும், ஆட்டோ, டாக்ஸி உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்களின் வாழ்வாதாரமும் இதனால் பாதிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

ஏற்கனவே நகர பேருந்துகளில் செயல்படுத்தப்பட்ட விடியல் பயணத் திட்டத்தால் தனியார் பேருந்துகளின் வருவாய் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் பல பேருந்துகள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

ராசிபுரத்தில் இயக்கப்படும் 10 தனியார் பேருந்துகளில் 4 பேருந்துகளும், நாமக்கல்லில் 7 பேருந்துகளும் தற்போது இயக்கப்படாமல் இருப்பதாகவும், பல உரிமையாளர்கள் வரி மற்றும் அனுமதிக் கட்டணங்களை செலுத்தி பேருந்துகளை காப்பாற்றி வருவதாகவும் தெரிவித்தார்.

தங்களது தாத்தா, தந்தை தொடங்கிய தொழில் அழிந்து விடக்கூடாது என்பதற்காகவே தொடர்ந்து பேருந்துகளை இயக்கி வருவதாகவும் சங்கர் கூறினார்.

அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்

கொரோனாவுக்குப் பிறகு பல்வேறு சிரமங்களை சந்தித்தபோதும், பொதுமக்களின் பயணம் பாதிக்கக்கூடாது என்பதற்காக இதுவரை போராட்டங்களில் ஈடுபடாமல் பேருந்துகளை இயக்கி வந்ததாக அவர் தெரிவித்தார்.

ஆனால் தற்போது தனியார் பேருந்து தொழில் மிகவும் மோசமான நிலையில் உள்ளதாகவும், அரசு தங்களது கோரிக்கையை ஏற்காமல் அனைத்து அரசு பேருந்துகளிலும் மகளிருக்கு இலவச பயணத் திட்டத்தை செயல்படுத்தினால், சங்கத்தின் தலைவர் மற்றும் செயலாளர் எடுக்கும் முடிவின்படி அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும், பரந்தூர் விமான நிலையத் திட்டத்தில் மக்களின் எதிர்ப்பை ஏற்று அரசு பின்வாங்கியது போல், அனைத்து அரசு பேருந்துகளிலும் மகளிருக்கு இலவச பயணம் வழங்கும் திட்டத்தையும் அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

இந்த செய்தியாளர் சந்திப்பில் சதீஷ்குமார், கிருபாகரன், கார்த்திக், மணிமாறன் உள்ளிட்ட தனியார் பேருந்து சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.