vmtalks.com ⚡ AMP

ராசிபுரத்தில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் மன்ற மகளிரணி ஆலோசனைக் கூட்டம்.

By Editor | Aug 26, 2026

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் மன்றத்தின் மாவட்ட மகளிரணி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில், மாவட்டம் முழுவதும் இருந்து 50-க்கும் மேற்பட்ட பெண் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். ‘இயக்கத்தில் பெண்கள்’ என்ற தலைப்பில் நடைபெற்ற கூட்டத்தில், ஆசிரியர்களின் பணிச்சூழல், பெண்களின் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டன.

இதில், பள்ளிகள் மற்றும் கல்வித்துறை அலுவலகங்களில் பெண் வன்கொடுமை தடுப்புக்கான உள்புகார் குழுக்கள் அமைக்கப்பட்டு, அவை முறையாகவும் பாரபட்சமின்றியும் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

பெண் ஆசிரியர்களுக்கு பணியிடங்களில் சம வாய்ப்பு, சமநீதி மற்றும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்களின் மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். ஆசிரியர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்வதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தொடர்ந்து, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநில பொருளாளர் முருகசெல்வராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கட்டாய ஆசிரியர் தகுதித் தேர்வில் இருந்து ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதை வரவேற்கிறோம். அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது என்றாலும், இதனுடன் நடவடிக்கைகளும் தொடர வேண்டும்.

69 சதவீத இடஒதுக்கீட்டை பாதுகாக்க தனிச்சட்டம் இயற்றப்பட்டதைப் போன்று, ஆசிரியர்களின் பணி மற்றும் பதவி உயர்வை பாதுகாக்கும் வகையில் தமிழக சட்டப்பேரவையில் தனிச்சட்டம் இயற்ற வேண்டும்.

மேலும், தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியின்படி பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.