ராசிபுரம் அருகே தொப்பப்பட்டி பகுதியைச் சேர்ந்த பரணி என்பவர் சுமார் ஒன்றரை வயதுடைய பிட்புல் நாயை வளர்த்து வந்ததாக கூறப்படுகிறது. தற்போது அவர் வெளிநாட்டில் இருப்பதால், நாயை பராமரிப்பதற்காக ராசிபுரம் ஐந்து கடை பகுதியில் வசிக்கும் தனது நண்பர் அறிவழகன் வீட்டிற்கு 5 நாட்களுக்கு முன்பு அழைத்து வந்துள்ளார்.
இந்த நிலையில், இன்று காலை அறிவழகன் உடற்பயிற்சி கூடத்திற்கு சென்றிருந்தார். அப்போது வீட்டில் இருந்த அவரது தாயார் கவிதா (43), பிட்புல் நாயை பராமரித்துக் கொண்டிருந்ததாக தெரிகிறது.
திடீரென நாய் கவிதாவை கடித்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் அவரது உடலின் பல்வேறு பகுதிகளில் காயம் ஏற்பட்டது. நாயிடம் இருந்து தப்பிக்க அவர் போராடிய நிலையில், அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு விரைந்து வந்தனர்.
நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு கவிதாவை நாயிடம் இருந்து மீட்ட பொதுமக்கள், 108 ஆம்புலன்ஸ் மூலம் ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, பிட்புல் நாய் மீண்டும் பொதுமக்களை தாக்கிவிடக்கூடாது என்பதற்காக அப்பகுதி மக்கள் ஒன்றுகூடி நாயை பாதுகாப்பான இடத்தில் சுற்றிவளைத்து கட்டுப்படுத்தினர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் நகராட்சி ஊழியர்கள், மயக்க ஊசி செலுத்தி பிட்புல் நாயை பாதுகாப்பாக பிடித்துச் சென்றனர்.
நண்பரின் வீட்டில் பராமரிப்பதற்காக கொண்டு வரப்பட்ட பிட்புல் நாய், அவரது நண்பரின் தாயாரையே கடித்து காயப்படுத்திய சம்பவம் ராசிபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.