நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகராட்சி அலுவலகத்தில் நகர மன்றக் கூட்டம் நகர மன்றத் தலைவர் கவிதா சங்கர் தலைமையில் நடைபெற்றது. நகராட்சி ஆணையாளர் கோபிநாத் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், தங்களது வார்டுகளில் நிலவும் குடிநீர், சாலை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து நகர மன்ற உறுப்பினர்கள் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.
தொடர்ந்து, கூட்டத்தில் புதிதாக 32 தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டன. இதில் பாதாள சாக்கடை திட்ட பராமரிப்புப் பணிகள், வாரச்சந்தை குத்தகை ஏலம், வார்டுகளில் உள்ள ஆழ்துளைக் கிணறுகள் மற்றும் திறந்தவெளிக் கிணறுகளில் உள்ள மின்மோட்டார்களை பராமரித்தல் உள்ளிட்ட 16 தீர்மானங்களுக்கு பெரும்பாலான நகர மன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
ஸ்டாலின் படத்தை வைக்க கோரிக்கை
இதனிடையே, நகர மன்றக் கூட்ட அரங்கில் தற்போதைய முதலமைச்சர் விஜய்யின் புகைப்படம் இடம்பெற்றுள்ள நிலையில், நகர மன்றத்தில் திமுக உறுப்பினர்கள் அதிகளவில் இருப்பதால், முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினின் திருவுருவப்படத்தையும் கூட்ட அரங்கில் வைக்க வேண்டும் என சில நகர மன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, அவர்களின் கோரிக்கையை ஏற்று மு.க.ஸ்டாலின் திருவுருவப்படம் நகர மன்றக் கூட்ட அரங்கில் வைக்கப்பட்டது.