ராசிபுரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 6 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ராசிபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த ஆண்டகளூர்கேட் பகுதியைச் சேர்ந்தவர் பேபி (56). இவர் தனது தாயார் லட்சுமியுடன் வசித்து வருகிறார்.
கடந்த 17-ம் தேதி லட்சுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், அவரை சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக பேபி அனுமதித்துள்ளார். இதையடுத்து கடந்த 2 நாட்களாக பேபி தனது தாயாருடன் மருத்துவமனையில் இருந்துள்ளார்.
வீடு பூட்டி இருப்பதை நோட்டமிட்ட மர்ம நபர்கள், வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் பீரோவை உடைத்து அதில் வைக்கப்பட்டிருந்த 6 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு திரும்பிய பேபி, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து உடனடியாக ராசிபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், கைரேகை நிபுணர்களுடன் இணைந்து வீட்டில் பதிவாகியிருந்த தடயங்களை சேகரித்தனர். மேலும், சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.