vmtalks.com ⚡ AMP

ராசிபுரம் அருகே அரசு பள்ளி விவகாரம்: 100-க்கும் மேற்பட்ட பெற்றோர் முற்றுகை.

By Editor | Aug 18, 2026

ராசிபுரம் அருகே அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர் மீது தொடர்ந்து புகார்கள் அளிக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், தலைமை ஆசிரியர் வேறு பள்ளிக்கு மாற்றப்பட்டதைக் கண்டித்து 100-க்கும் மேற்பட்ட பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த புதுப்பாளையம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் ராஜா–சசிகலா தம்பதியின் 2 குழந்தைகள் படித்து வருகின்றனர்.

இந்நிலையில், பள்ளியில் மாணவர்களுக்கு அதிகளவில் வீட்டுப்பாடம் வழங்கப்படுவதாகவும், ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர் மீது சம்பந்தப்பட்ட பெற்றோர் தொடர்ந்து புகார்கள் அளித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியர் பாலமுரளி மாவட்ட கல்வி அலுவலரால் வேறு பள்ளிக்கு மாற்றப்பட்டதாக தெரிகிறது.

பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்

தலைமை ஆசிரியர் மாற்றப்பட்ட தகவல் அறிந்ததும், பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர் 100-க்கும் மேற்பட்டோர் பள்ளி வளாகத்தில் திரண்டனர். மாணவர்களை வகுப்பறைகளுக்கு அனுப்பாமல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது புகார் அளித்ததாக கூறப்படும் ராஜா–சசிகலா தம்பதியினர் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து வந்தனர். அவர்களை மற்ற பெற்றோர் தடுத்து நிறுத்தி, பள்ளி நிர்வாகம் தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

மாணவர்களை வேறு பள்ளிக்கு மாற்றக் கோரிக்கை

பள்ளியில் தொடர்ந்து புகார்கள் அளித்து வரும் பெற்றோரின் குழந்தைகளுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்கி வேறு பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர் வலியுறுத்தினர்.

இல்லையெனில், தங்களது குழந்தைகளுக்கும் மாற்றுச் சான்றிதழ் பெற்று வேறு பள்ளியில் சேர்க்க வேண்டிய நிலை ஏற்படும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து மாணவர் ஒருவரின் பெற்றோர் பிரியதர்ஷினி கூறுகையில், பள்ளியில் தற்போது ஆசிரியர்கள் நன்றாக பாடம் நடத்தி வருவதாகவும், தலைமை ஆசிரியர் பொறுப்பேற்ற பின்னர் மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்தி வந்ததாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து புகார்கள் அளிக்கப்பட்டதன் காரணமாக தலைமை ஆசிரியர் வேறு பள்ளிக்கு மாற்றப்பட்டிருப்பது மாணவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், எனவே பள்ளிக்கு மீண்டும் தலைமை ஆசிரியரை நியமிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

மேலும், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர் மீது ஆதாரமற்ற புகார்கள் அளிப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பெற்றோர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.