ராசிபுரம் நகர அதிமுகவில் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டதை தொடர்ந்து, கட்சி நிர்வாகிகள் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு மாவட்டங்களில் கட்சி நிர்வாகிகளை மாற்றி புதிய நிர்வாகிகளை நியமித்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக, நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகர செயலாளராக இருந்து வந்த பாலசுப்பிரமணியம் அந்தப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து ராசிபுரம் நகரம் வடக்கு, தெற்கு என இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டு, ராசிபுரம் வடக்கு நகர செயலாளராக கோபாலும், ராசிபுரம் தெற்கு நகர செயலாளராக சீனிவாசனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
புதிய நகர செயலாளர்களுக்கு அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து இருவரும் ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதையடுத்து கட்சி நிர்வாகிகள் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.