vmtalks.com ⚡ AMP

ராஜா வாய்க்காலில் தண்ணீர் திறக்கக் கோரி காவிரி ஆற்றில் இறங்கி விவசாயிகள் போராட்டம்.

By Editor | Aug 15, 2026

ராஜா வாய்க்காலில் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படாததால் வெற்றிலை உள்ளிட்ட பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறி, பரமத்திவேலூர் அருகே 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் காவிரி ஆற்றில் இறங்கி நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜேடர்பாளையம் படுகை அணையில் இருந்து ராஜா வாய்க்காலுக்கு திறக்கப்பட்டு வந்த தண்ணீர் கடந்த 15 நாட்களுக்கு முன்பு முன்னறிவிப்பின்றி நிறுத்தப்பட்டதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

இதனால் பரமத்திவேலூர், பொத்தனூர், நஞ்சை இடையாறு, பாலப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 30 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள வெற்றிலை, கோரை, வாழை உள்ளிட்ட பயிர்கள் தண்ணீர் இன்றி கருகும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து இளம் விவசாயிகள் சங்கத் தலைவர் சௌந்தர்ராஜன், விவசாய முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் தலைமையில் விவசாயிகள் காவிரி ஆற்றில் இறங்கி தமிழக அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

பாசனத்துக்கு உடனடியாக தண்ணீர் திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.

தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் வரும் திங்கள்கிழமை பரமத்திவேலூரில் நாமக்கல்கரூர் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என விவசாய முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.