vmtalks.com ⚡ AMP

ராஜவாய்க்காலில் தண்ணீர் திறக்கக் கோரி 1,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உண்ணாவிரதம்.

By Editor | Aug 20, 2026

ராஜவாய்க்கால் உள்ளிட்ட பாசன வாய்க்கால்களில் முன்னறிவிப்பின்றி தண்ணீர் நிறுத்தப்பட்டதைக் கண்டித்து, அனைத்து பாசன விவசாயிகள் சங்கங்கள் சார்பில் பரமத்தி வேலூரில் 1,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ராஜவாய்க்கால் மற்றும் அதனைச் சார்ந்த பாசன வாய்க்கால்களை நம்பி வெற்றிலை, வாழை, கரும்பு, மரவள்ளிக்கிழங்கு, கோரை உள்ளிட்ட பயிர்கள் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், பாசன வாய்க்கால்களில் எவ்வித முன்னறிவிப்புமின்றி தண்ணீர் நிறுத்தப்பட்டதால், பாசன வசதியின்றி பயிர்கள் காய்ந்து கருகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டினர்.

இதனால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளதாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் ராஜவாய்க்கால் உள்ளிட்ட அனைத்து பாசன வாய்க்கால்களிலும் உடனடியாக தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

1,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

இந்த கோரிக்கையை வலியுறுத்தி பரமத்தி வேலூரில் நடைபெற்று வரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் அனைத்து பாசன விவசாயிகள் சங்கங்களைச் சேர்ந்த 1,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றுள்ளனர். அவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.

500-க்கும் மேற்பட்ட கடைகள் அடைப்பு

விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், பரமத்தி வேலூர், பொத்தனூர் மற்றும் பாண்டமங்கலம் நகர வர்த்தக சங்கங்களின் அழைப்பின் பேரில் 500-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

கடைகள் மூடப்பட்டதால் அப்பகுதிகளில் வர்த்தக நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டதுடன், பரமத்தி வேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளின் கோரிக்கையை அரசு உடனடியாக பரிசீலித்து, ராஜவாய்க்கால் உள்ளிட்ட பாசன வாய்க்கால்களில் தண்ணீர் திறந்துவிட்டு, கருகும் நிலையில் உள்ள பயிர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் வலியுறுத்தினர்.